Pages

sai yoga centre

sai yoga centre

Sunday, January 26, 2014

உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்

ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம் சார்ந்த விடயமோ அல்லது ஏதும் தத்துவம் சார்ந்த விடயமோ என்ற ஆய்வுக்குள் நுழைய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.பொதுவில், மனது ஒருங்கிணைப்புக்கான ஒரு பயிற்சி என்றே இதனை எடுத்துக்கொள்ள முடியும்.
ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது எழுத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் போது, காற்றானது நமது நாசியில் ஒரே சீராக சென்று வருகிறது. இப்படி ஒரு லயத்தில் செல்லும் மூச்சுக்காற்றானது உடலில் இதுவரை இருந்து வந்த, தாறுமாறான அதிர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு லயத்தில் ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு பொது இடத்தில் கிளம்பும் இரைச்சல் நின்று போய் அங்கே ஒரு நாதம் கிளம்புகிறது. இந்த நாதமானது உடலுக்கும் மனதுக்கும் மென்மையை தருகிறது.
ஒரு இடத்தை கடந்து செல்ல முயற்சிக்கிறோம். அந்த இடத்தின் அருகில் காதைப்பிளக்கும் ஓசையை வெளிப்படுத்தும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தை கடந்து செல்லும் போது காதுகளை நம்மை அறியாமலே பொத்திக் கொள்வோம். இது இயற்கை. இது போன்றே நம்மை அறியாமலே நம்மை சுற்றி நடைபெறும் செயல்களின் அதிர்வுகள் நமது உடலை அதன் மென்மையான ஆன்மாவை ஏதோ ஒரு விதத்தில் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கின்றன. இதனை அகற்றி அந்த இடங்களுக்கு மென்மையான கீதத்தை கொண்டு சொல்லும் போது அந்த பாகங்கள் அனைத்தும் தனது அதிர்விலிருந்து நின்று இயல்புக்கு திரும்புகின்றன. இந்த மென்மையான கீதத்தை, லயத்தை தருவது தான் ஒற்றைச்சொல் தியானம் என்று சொல்லலாம்.
ஒற்றைச் சொல் தியானத்தின் பலன்களை அதனை அன்றாடம் பயிற்சி செய்து வரும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
ஓஷோவின் தத்துவங்கள் சில நேரங்களில் புரிதலில் கடுமையானதாக இருந்தாலும் யதார்த்தை பிரதிபலிப்பது உண்மை. இதில் ஒன்றை பார்க்கலாம். " இறக்கும் சுவர்க்கோழி பூச்சி மரணமடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அது பாடிக்கொண்டு தான் இருக்கிறது. இறந்து கொண்டிருக்கும் அதன் பாட்டு உயிர் நிறைந்ததாய் உள்ளது. ஒவ்வொரு விழிப்புணர்வுடைய மனிதனும் இப்படி தான் இருக்க வேண்டும். மரணத்துக்குள் காலடி வைத்து விட்ட பிறகும், உயிர் நிறைந்த நிலையிலேயே மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது மரணமே இருக்காது" என்கிறார் ஓஷோ.
ஆம். பிறந்த அனைவருக்கும் மரணம் வரத்தான் போகிறது. பிறகு ஏன் நடந்து போனவற்றையும், நடக்க போகிறவற்றையும் பற்றி கவலைப்படுவானேன்? கண்ணதாசன் கூட தனது அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் எங்கு சுற்றி விளக்கினாலும் கடைசியில் சொல்ல வருவது இது தான். இதே போல் கடஉபநிதஷத்தில் வானத்து தேவர்களுக்கும் மரணம் இருப்பதாக எமன் சொல்வதாக கூறப்பட்டுள்ளது. ஆக, மரணம் இல்லாத வாழ்வு என்பது வானத்து தேவர்களின் வாழ்வை விட சிறப்பாக வாழ்வதில் மட்டுமே என்பதை தான் இந்த உபநிடதங்கள் விளக்கி விட்டு போகின்றன.
இயற்கையில், மதங்கள் கூறுவதெல்லாம் அன்பு செய் அனைவருக்கும் என்பதே!. இது எப்போதும் எல்லாருக்கும் எளிதாக வந்து விடக்கூடிய காரியமல்ல. ஆனால் இந்த குணத்தை எளிதாக கொண்டு வர ஏற்படுத்தப்பட்டது தான் இயமங்கள், நியமங்கள் மற்றும் தியானங்கள் என்று அனைத்தும். இதன் ஒரு பகுதி தான் இந்த ஒற்றைச் சொல் தியானமும்.
அதாவது மிகப்பெரிய மலை என்ற பெருவாழ்வை நோக்கி செல்வதற்கான ஒரு எளிய படி. இந்த படியில் ஏற முடிந்தால், வானத்து தேவர்களை விட பெருவாழ்வை எட்டுகிறேமோ இல்லையோ....இந்த உலக வாழ்வில் பொறுமை, அன்பு போன்ற குணங்களை எளிதில் கடைப்பிடித்து விட இலகுவான ஒன்றாக இந்த ஒற்றைச் சொல் தியானம் என்ற உத்தி பயன்படும் என்பது உறுதி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவர் தனது நோயாளிகளை குணப்படுத்த இந்த ஒற்றைச் சொல் தியான உத்தியை கடைப்பிடித்ததாக தனது அனுபவத்தில் சொல்லியிருந்தார். அவரது வார்த்தைகளில் இருந்தே அதை பார்ப்போம்." ஒற்றைச் சொல் தியான முறை என்பது ஒரு எளிய பிராணயாம பயிற்சி. இதில் மூச்சை உள் இழுக்கும் போதும், வெளிவிடும் போது மிகுந்த நிதானம் தேவை. மெதுவாக படிப்படியாக மூச்சை உள் இழுத்து பயிற்சி செய்யும் போது நுரையீரல் பிராண வாயுவால் நிரம்புகிறது. பிறகு ஓ......ம் என்ற ஒலியுடன் மூச்சை வெளிவிடும் போது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கரியமில வாயு வெளியேறுவதுடன் உடலெங்கும் ஒரு வித அதிர்வு பரவுகிறது. இதை இந்த ஒற்றை சொல் பிராணயாம பயிற்சியை செய்யும் போது நன்றாக உணர முடியும்.
அவரவர் பக்குவம், வயது, திறன், உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வித ஒலிப்பயிற்சிகள் (ஓம் என்பதற்கு பதிலாக ஆமென், அல்லா என்று கூட அவரவருக்கு பிடித்த வார்த்தைகளை பயன்படுத்தலாம். ஆனால் ம் என்ற முடியும் ஒலிக்கு அதிர்வு அதிகம்). இதை முறைப்படி பின்பற்றினால், அளவிடற்கரிய நன்மைகளை அடையலாம். இந்த பயிற்சியால் நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் இவற்றிலும் மனநிலையிலும் மிகுந்த மாற்றங்கள் தோன்றுவதை உணர முடியும்.
பொதுவாக பத்மாசனத்தில் அமருவதும், மனதை ஒருமுகப்படுத்துவதும் எல்லோருக்கும் எளிதல்ல. மனம் என்பது கட்டுப்பாடற்றது. அது அலைபாயும் இடத்திற்கு எல்லாம் நம்மை இழுக்கும். ஆனால் அதன் போக்கை நாம் புரிந்து கொண்டு அதை கட்டுப்படுத்த முயன்றால் அது பதுங்க தொடங்கி விடும். குறிப்பிட்ட காலத்தில் தப்பிக்க முடியாது என்று தெரிந்த நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கும். இந்த மனதை அடக்க ஓம் ஒற்றைச் சொல் தியான முறை எளிதான ஒரு தந்திரம். இது நிச்சயமாக பலன் தருகிறது. இந்த பயிற்சியால் உடலும், மனதும் நெகிழ்ந்து போகிறது. வேண்டாத தளர்ச்சியும், சோர்வும் நீங்குகிறது. வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் மிகுந்த சிரத்தையுடன் குறிப்பிட்ட நேரத்தில் (குறிப்பாக அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 3 மணி முதல் 4 மணிக்குள்) இதனை பயிற்சி செய்ய தொடங்கினால் விரைவில் தொடர் பயிற்சி எளிதாகி விடும்.
என்னிடம் ஆஸ்துமா நோய்க்காக வைத்தியத்திற்காக ஒருவர் வந்தார். அவரிடம் இந்த ஒற்றைச் சொல் தியான முறையை கடைப்பிடிக்க சொன்னேன். மிகவும் அதிசயமாக, ஒரே வாரத்தில் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆஸ்துமாவின் தொந்தரவு வேகமாக குறைந்து நின்று போனது. மருந்துகளால் கட்டுப்படாத ஆஸ்துமா ஒற்றைச் சொல் தியான முறைக்கு அடங்கி போனதில் ஆச்சரியமில்லை. அவ்வளவு பலனுள்ளது. இதே போல் மனச்சோர்வுக்காக வைத்தியத்திற்காக வந்த நோயாளிகள் பலரும் ஒற்றைச் சொல் தியானத்தில் பலனை அடைந்திருக்கிறார்கள். எத்தனையோ மனச்சோர்வுகள் வந்த போதும் அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அந்த அளவுக்கு ஒற்றைச் சொல் தியான முறை எதையும் தூள்தூளாக்கி மனதுக்கும், உடலுக்கும் வலிமை தரும்.
ஒற்றை சொல் தியான முறையால் நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது. உடல் தசைகள் வலுவடைகிறது. நினைவு திறன் பெருகுகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை பெருகுகிறது. நமக்குள் இருக்கும் மன உறுதி வலுவடைந்து விடுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த பயிற்சியால் நமக்கே தெரியாமல் இருக்கும் தேவையில்லாத மனஇறுக்கம், சோர்வு, அச்சம், கனவு தொல்லை, உடல்வலி உள்பட பல நோய்கள் நீங்கிவிடும். நம்மிடம் காலம் காலமாக மறைந்து கிடக்கும் திறமைகளை நமக்கு முற்றிலும் உணர வைக்கும் ஒரு பயிற்சி இது என்பதை கண்கூடாக காணலாம். ஒற்றைச் சொல் தியான முறையை 3 மாத காலத்திற்கு கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை கண்டிருக்கிறார்கள். செய்து பார்த்தாலே பலன் தெரியும்.
முந்தைய காலங்களில் இந்தியாவில் சர்க்கரை நோய் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததாக சொல்வார்கள். ஆனால் பசுமை புரட்சி என்ற பெயரில் பயிர்களுக்கு என்றைக்கு ரசாயனத்தை தெளித்தார்களோ அன்றைக்கே நோய்களின் ஆதிக்கமும் தொடங்கி விட்டது என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது இப்போது. பயிர்களுக்கு ரசாயனம் அடித்த காரணத்தால் இப்படி நோய் வருகிறது என்றால் இன்றைக்கு வரும் நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் தான் தீர்வு என்ற நிலையில் புரியாத ரசாயனங்களை எல்லாம் உடலுக்கும் கொண்டு செல்கிறோம். இதன் விளைவு....?!எனவே, மருந்துகளும் அதனால் வரும் பக்க விளைவுகளும் மலிந்து போன இந்த காலகட்டத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான முறையிலிருந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்.

தியானத்தின் சிறப்பு!



ஆத்மன் அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே தியானம். தியான சமயத்தில் மனம் ஒருநிலைப்பட்டு, நாடி நிற்கும் பொருளின் உருவத்தைக் கொள்கிறது. சிதறுண்ட மனக்கதிர்கள் மெதுவாக ஒன்று திரட்டப்பட்டு மனம் ஒருநிலைப்படுகையில் தியானத்தில் நீங்கள் இன்பத்தை அனுபவிப்பீர்கள். தியானத்தில் நீங்கள் ஒழுங்காக இருத்தல் வேண்டும். காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் தியானத்தை நீங்கள் பயிற்சி செய்தல் வேண்டும். தியானத்திற்காக இரண்டு அல்லது மூன்று இருக்கைகளைக் கொள்ளுங்கள். வைராக்கியத்தை வளருங்கள். மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். பிரம்மச்சரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். படிப்படியாக தியானத்திற்குரிய காலஅளவை உயர்த்துங்கள். நீங்கள் தியானத்திற்கு அமருகையில் மனம் ஒருவிதக் குறிக்கோளுமின்றி சுற்றித் திரிந்தாலும், தெய்வீக எண்ணங்கள் தோற்றுவிக்கப்படாவிட்டாலும், தியானப் பயிற்சியை நீங்கள் விட்டுவிடுதல் கூடாது. மெல்ல மெல்ல நீங்கள் மனஅமைதியைப் பெறுவீர்கள். மனம் சூனிய நிலையை அடையும்போதெல்லாம் சர்வ வல்லமை, சர்வ வியாபகத்தன்மை, சர்வக்ஞத்துவம், சச்சிதானந்த ஸ்வரூபம், பரிசுத்தத் தன்மை, தூய்மை எல்லையற்ற தன்மை, என்றுமழியாத்தன்மை, நித்தியத் தன்மை போன்ற இறைவனது திருப்பண்புகளை மானஸீகமாக திரும்பத் திரும்ப நினையுங்கள். குரு ஸ்தோத்திரங்களையோ, தேவ கீதமொன்றையோ பண்ணுடன் இசையுங்கள். படிப்படியாக நீங்கள் தெய்வீக எண்ணங்களை வளரச் செய்வீர்கள். மனம் கட்டுக்கடங்காது நிற்கும் நேரம், ஆன்மீக எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் நித்திய கர்மங்களைச் செய்து துவங்கலாம். மனதைத் தொழிலற்ற நிலையில் வைத்துக் கொள்ளுதலால் மாத்திரம் ஆத்மனை அறிவதாகாது. உங்களுக்கு அது சிறிதளவு உபயோககரமாக இருக்கும். இடைவிடாது நீங்கள் பிரம்மகார விருத்தியை உருவாக்க வேண்டியதிருக்கும். மனத்தில் அழுக்குகள் அதிகமாக இருக்கின்றன. தியானத்தின்போது நீங்கள் ஒருவிதத் திருப்தியும் அடையாமலிருக்கக் காரணம் அதுவேயாகும். கடவுள் தன்மையை அடைதல், ஆத்மீக அறிவைப் பெறுதல், ஆத்மனிலிருந்து நீங்கள் வேறுபட்டவர்களல்ல என்பதை அறிதல், உண்மையில் நீங்கள் அந்த அமர அழியா ஆத்மனே என்பதை உணர்தல் முதலியவை தியானத்தின் நோக்கமாகும். தெய்வீகத் தன்மையைப் பெறுவதற்கான வேட்கை உங்களிடம் இன்னும் தோன்றவில்லை. தேவை இருக்கையில் தான் விநியோகம் நடைபெறுகிறது. ஆகையால் தெய்வீகத்தில் வாழ இடையறாது விரும்புங்கள். நம்பிக்கை குன்ற அனுமதிக்காதீர்கள். பின்புதான் நிலைத்த மனமும், தியானத்தில் ஊக்கமும் உண்டாகின்றன.

தியானிக்குங்கால் சாதகன் கடைப்பிடிக்கும் மார்க்கத்தையொட்டியோ, ஜிஜ்ஞாசுவின் இயற்கைத் தன்மைக்கு ஒத்தவாறே மனநிலை வேறுபடுகிறது. அவன் ஒரு பக்தனாக இருப்பானேயாகில் வேலைக்காரனொருவன் தன் எஜமானனிடம் காட்டிக்கொள்ள வேண்டிய பணிவு, சரணாகதி முதலிய உயர்குணங்களைப் பெற்றிருக்கிறான். கடவுளைத் துதிக்கிறான். அவன் புகழைப் பாடுகிறான். கடவுளையே எப்பொழுதும் நினைவிலிருத்துகிறான். அவனை வணங்கி, பெருமைபடுத்துகிறான். அவனுக்கு சேவை செய்யவும், அவனை இன்புறச் செய்வற்காகவுமே அப்பக்தன் வாழ்கிறான். தன் இஷ்ட தேவதையின் உருவிலேயே சாதகன் இடையறாது தியானிக்க வேண்டும். அவன் ஓர் வேதாந்த மாணாக்கனாயிருப்பானேயாகில் நானே அந்த அழியா ஆத்மன், நானே எல்லாவற்றிலும் எல்லாம்; நானே சச்சிதானந்தப் பிரம்மன் என்பதை உணர்கிறான். பிரிக்க முடியாத சுதந்திரமான அழியாத, சர்வ வியாபியான ஆத்மனுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்கிறான். சமாதி நிலையை அடையும் பொழுதுதான் தியானம் பூரண நிலையை அடைந்துவிட்டதென்று சொல்லலாம். தியானிப்பவரும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றாகவே ஆகிவிட வேண்டும். நிறைவு, உயரியசாந்தி, சமநிலை, மனபலம், தூய்மை இணையிலா இன்பம், மனதில் ஒரு பிரத்யேக புனித உற்சாகம் முதலியவைகளே நீங்கள் தியானத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளங்களாகும்.

தியான யோக ரகசியம்!



சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி அவர்தான். முனிவர்கள், துறவிகள், யோகிகள், வேதாந்திகள், தீர்க்கதரிசிகள் அனைவராலும் போற்றப்படும் கடவுளை யோகப்பயிற்சியின் மூலமே நீங்கள் உணரமுடியும்.

தோற்றங்களின் பின் நிற்கும் உண்மை

ஆரம்பத்தில் ஒன்றென்ற எண் இல்லாத நிலையில் எவ்வளவு பூஜ்யங்களை அடுக்கிச் சென்றாலும் அந்தப் பூஜ்யங்களுக்கு மதிப்பில்லாமல் ஆகிவிடுவது போல், ஆத்மீக வாழ்க்கை வாழவில்லை என்றால், ஆத்மீகப் பொக்கிஷத்தைப் பெறவில்லையென்றால், ஆத்மானுபூதிக்கான முயற்சி இல்லையென்றால் மூவுலகச் செல்வங்களும் வீணே. நீங்கள் உள்ளுள்ள ஆத்மனில் வாழ வேண்டும்; இங்கு வாழ்வுடன் ஆத்ம ஞான்தைச் சேர்க்க வேண்டும். எனவேதான், ஏசுநாதர் தெரிவிக்கிறார்: நீங்கள் முதலாவதாக ஆண்டவனின் ராஜ்யத்தையும், அவரது நேர்மையையும் நாடி நில்லுங்கள். இந்தப் பொருள்கள் அனைத்தும் உங்கள்மீது சுமத்தப்படும்.

நீங்களே அது: உங்களுக்குள் அபாரசக்தி அமைந்துள்ளது. உங்களால் மற்றவரின் செல்வாக்கைப் பெற இயலும், அருகிலும், அதிதூரத்திலும் அநேகாயிரம் மக்கட்கு உங்களால் சந்தோஷத்தையும் சாந்தியையும் பரப்ப முடியும். வெகுதூரத்திலிருந்தே உங்களால் மற்றவரை உயர்த்த சாத்தியப்படும். அஞ்ஞானத்திரை அகன்றதும் நீங்களே கடவுள் ஆகின்றபடியால், மற்றவர்களிடம் உங்களது சக்திவாய்ந்த நன்மை மிகும் எண்ணங்களைப் பரப்ப முடியும்.

உள்மனிதனுக்குரிய கல்வி: இந்த உலகம் ஒரு மாபெரும் பள்ளிக்கூடம். இந்த உலகம் உங்களது கல்விக்காகவே இருக்கிறது. அன்றாடம் பற்பல விலையுயர்ந்த பாடங்களை நீங்கள் படிக்கிறீர்கள். வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் யோகநிலையில் நீங்கள் நன்கு பயன்படுத்தினால், உங்கள் இச்சா சக்தியும் தகுதிகளும் வளர்ச்சியடைவீர்கள். உங்கள் மனம் விரிவடையும். சம்பூர்ண வளர்ச்சி ஏற்படும். லட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேறுவீர்கள். ஒவ்வொன்றாகத் திரைகள் எல்லாம் கீழே விழுந்து விடும். தடைகளும் எல்லைகளும் இல்லாததாகும். தளைகள் நீங்கும். தெய்வீகமான ஜோதி, அறிவு, தூய்மை, சாந்தி, ஆத்மீக சக்தி முதலியவற்றை நீங்கள் பெறுவீர்கள்.

சுய விடுதலை: உங்கள் தலைவிதியின் கர்த்தா நீங்கள் தான். நீங்களே அதற்கு ஜவாப்தாரி. உங்களுக்கு ஏற்படும் இன்பம் துன்பங்களின் சிற்பி நீங்கள் தான். எங்ஙனம் பட்டுப்புழுவானது தன்னைச் சுற்றி வலையை ஏற்படுத்திக் கொள்வதனால் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறதோ, அதேபோல் உங்களுடைய செய்கைகள், விருப்பு வெறுப்புகள், பொய்யான ஆணவம் முதலியவற்றால் நீங்கள் இந்த மாமிசத்தாலான கூட்டை உண்டாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் மாமிசத்தின் அடிமையாக, உங்கள் சரீரம் மனத்தின் அடிமையாக எண்ணற்ற ஆசைகளின் அடிமையாக ஆகிவிட்டீர்கள். வருந்தாதீர்கள்! பிரகாசம் பொருந்திய வருங்காலம் உங்களை எதிர்நோக்கி நிற்கிறது. இப்பொழுதே இந்த வினாடியிலேயே மயக்குறும் இந்தப் பொய்யான கூட்டை விட்டு வெளிவர முயலுங்கள். உங்கள் முயற்சி உண்மையாக இருந்தால், இம்முடிவை அடைய நீங்கள் முழு முயற்சியையும் செய்வீர்களேயானால், கடவுளின் கிருபையால் நீங்கள் அறியாமையெனும் இந்த இருண்ட மேகத்தை விரட்டி, உங்களின் இயற்கையான தெய்வீக நிலைகளில் உயரிய பிரகாசத்தில் சிறந்து விளங்குவீர்கள். பரமாத்மனுடனுள்ள உங்களது ஒருமைப்பாட்டை உணர விழித்தெழுங்கள். தொடர்ந்து ஆத்மனையே எண்ணி நில்லுங்கள். போராட்டம் தீவிரமாக நடைபெறுக. உங்கள் முயற்சிகள் ஆத்மார்த்த தன்மையுடன் அமைவதாக. உங்கள் நோக்கம் பரிசுத்தமாக இருக்குமாக. இறுகிய ஒழுங்குமுறை, உயரிய உறுதிப்பாடு, உயர்ந்த இச்சா சக்தி, முதிர்ந்த சாதனை அல்லது ஆத்மீகப் பயிற்சி இவை நின்று நிலவ வேண்டும். அப்பொழுது இறுதி மோட்சத்தைப் பெறக் கஷ்டமே இராது.

உண்மையின் தன்மயமாதல்: வெறும் அறிவுத்துறை ஞானம் மட்டும் உங்களுக்குப் பயன்படாது. நீங்கள் உண்மையாகவே பரமாத்மனுடனுள்ள உங்களது ஒன்றுபட்ட தன்மையை உணருவதோடு, அந்தரங்கத்தில் அதை அனுபவிக்கவும் வேண்டும். என்றும் இந்த லட்சிய ஆத்மீக வாழ்வில் நீங்கள் வாழ வேண்டும். உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் உங்களது முற்றிலும் மாறுபட்ட நிலையை உண்மையாகவே உணரட்டும். ரோஜாப்பூவிலிருந்து நறுமணம் பரந்து நிற்பதைப் போல், உங்களைச் சுற்றி ஆத்மீக நறுமணம் வீசி நிற்கும். தாமதம் வேண்டாம். கவலை வேண்டாம். ஒரு வினாடிப் பொழுதையும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு மணிதோறும் நீங்கள் வயதாகிக் கொண்டே வருகிறீர்கள். மானிடப் பிறவி, விடுதலைக்கான வேட்கை, பூரண நிலையடைந்த மாமுனிவரின் சீரிய பாதுகாப்பு இம்மூன்றும் அரிதான பொருள்கள். கடவுள் கிருபையால் உங்களிடம் இம்மூன்றுமே அமைந்துள்ளன. காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளுங்கள். தியானத்தை ஒழுங்காக அப்பியசிப்பதால் கடவுளை அடைந்து, சிரஞ்ஜீவித்துவத்தின் அமிருதத்தைப் பருகுங்கள். ஒன்றித்தலைப் பின்தொடர்ந்து தியானம் தோன்றி நிற்கிறது. ஒன்றித்தல் தியானத்திலுள் லயமாகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளையே மனதில் கொண்டு நிற்றல் ஒன்றித்தல். அந்தப் பொருளிலுள்ள தொடர்ந்த அறிவுப்பெருக்கே தியானம். தியானம் மனக்கதவைத் திறந்து மெய்யறிவுக்கு அழைத்துச் செல்கிறது. அது உங்களுக்குப் பற்பல சித்திகளை அளிக்கிறது. வேண்டியவற்றை எல்லாம் நீங்கள் தியானம் மூலமாகப் பெற்றக்கொள்ளலாம். இப்பொழுது நான் உங்களுக்குத் தியானத்திற்குரிய சில நடைமுறை விதிகளைக் கொடுக்கிறேன். ஆன்மீகப் பாதையில் வழிகாட்டுவதுடன் உங்களுக்கு சேவையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் அந்தப் பாதைவழிச் செல்ல வேண்டியது உங்கள் கடமையாகும்.

சூழ்நிலை: தியானத்துக்கெனத் தனித்ததோர் அறையை ஏற்பாடு செய்யுங்கள். அதனுள் யாரையும் அனுமதிக்காதீர்கள். அறையினுள் ஊதுவத்திகளைப் பொருத்தி வையுங்கள். கால்களை நன்கு சுத்தம் செய்த பிறகே அவ்வறையினுள் செல்லுங்கள். அவ்வறையினுள்ளோ அல்லது தொந்தரவு ஏற்படாதவாறுள்ள வேறு ஏதாவது அமைதியான இடத்திலோ ஓய்வெடுங்கள். அங்கு உங்கள் மனம் ஓய்வு பெறும் நிலையை அடையும். எப்பொழுதும் இதே மாதிரி அமைதி மிகும் நிலை இருக்குமெனக் கூற முடியாது. எனவே நீங்கள் உங்களால் முடிந்த அளவு முனைய வேண்டும். நீங்கள் தனித்துக் கடவுளுடன் ஒன்றாக இருக்க வேண்டும்.

காலம்: பிரம்ம முகூர்த்த காலமாகிய அதிகாலையிலிருந்து 6 மணி வரையிலுள்ள நேரம் தியானப் பயிற்சிக்கு மிகச்சிறந்தது. இதேபோல் இரவு 7 மணி முதல் 8 வரையிலும் இனியொருமுறை தியானத்திற்கு அமரலாம்.

ஆயத்தம்: நீங்கள் வெகுவாக விரும்பும் தெய்வத்தின் உருவத்தையோ, படத்தையோ அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அங்கே கீதை, பைபிள் முதலிய ஓரிரண்டு சமய நூல்களையும் வைப்பதோடு, தியானத்திற்கு முன்னதாக எண்ண அலைகளை மாற்றுவதற்கு வேண்டி அந்த நூல்களில் ஓரிரண்டு பக்கங்களைப் பாடம் செய்யுங்கள். படத்தின் முன் ஒரு சிறிய போர்வையை விரித்து அதன்மீது பத்மாசனத்திலோ, அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு ஆசனத்திலோ அமருங்கள். தலை, கழுத்து, முதுகெலும்பு மூன்றையும் ஒரே கோட்டில் நிமிர்ந்த நிலையில் வையுங்கள். முன் பக்கமோ பின் பக்கமோ சாயாதீர்கள்.

மனதிலேயே குருவின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள்.

குருர் பிரஹ்மா குருர்விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வரஹ
குருர் சாக்ஷõத் பரப் பிரம்ம
தஸ்மைஸ்ரீ குரவே நமஹ: என்ற கீதத்தையோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடலையோ குருஸ்துதியாகப் பாடுங்கள். பிறகு, கீழ்க்கண்டவாறு உச்சரியுங்கள். ஓம் ! ஓம் ! ஓம் !!!

மன ஒருமைப்பாடு: உங்கள் கண்களை மூடி இரு புருவங்களுக்கும் நடுவிலுள்ள இடமாம் திரிகுடியில் உங்கள் பார்வையை ஒன்றிக்கச் செய்யுங்கள். கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். ஒருபொழுதும் மனதுடன் குஸ்தி போடாதீர்கள். மனதை ஒன்றிக்கச் செய்யும் பொழுது பலாத்கார முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். தசைகள், நரம்புகள் எல்லாவற்றையும் தளர விடுங்கள். மூளைக்கு ஓய்வு கொடுங்கள். மெதுவாகக் கடவுளை நினையுங்கள். மெல்லிய குரலில் உங்கள் இஷ்ட மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். கொப்பளிக்கும் மனதைச் சாந்தப்படுத்துங்கள். எண்ணங்களை இல்லாதாக்குங்கள். மனதை பலாத்கார முறைகளால் அடக்கமுயலாதீர்கள். ஆனால் அதன் போக்கிலே அதை ஓட அனுமதியுங்கள். தளர்ச்சியுறும் வரை அதை ஓடவிடுங்கள். ஆரம்பத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கம்பத்தில் கட்டப்படாத குரங்கைப்போல் அங்குமிங்கும் குதித்துத் திரிந்து கடைசியில் சோர்ந்து போனபின் மனமானது உங்கள் உத்திரவை எதிர்நோக்கி நிற்கிறது. மனதை வசப்படுத்தச் சில காலம் ஆகலாம். ஆனால் ஒவ்வொரு சமயம் நீங்கள் முயற்சிக்கும்போதும் அது குறுகிய காலத்துக்குள்ளேயே உங்களிடம் வந்து சேரும்.

இருவிதத் தியானம்: தியானம் இருவகைப்படும் - சகுணம், நிர்குணம். தெய்வத்தின் ஒரு உருவத்தின் மீதுள்ள தியானமே சகுணத்தியானம். இதுவே உறுதியான தியானம். உங்களுக்குப் பிடித்தமான தெய்வத்தின் உருவத்தைத் தியானித்து அவர் பெயரை மானசிகமாக ஜபம் செய்யுங்கள். இதுவே சகுணத்தியானம். அல்லது ஓம் எனும் பிரணவத்தை மானசிகமாக உச்சரித்து, எல்லையற்ற தன்மை, நித்தியத்தன்மை, தூய்மை, உணர்வு, உண்மை, பேரின்பம் முதலிய கருத்துக்களைத் தியானம் செய்யுங்கள். இவற்றுடன் ஒன்றுபடுத்தி நில்லுங்கள். இதுவே நிர்குணத் தியானம். ஒரு முறையைக்கைக் கொள்ளுங்கள். ஆரம்ப நிலைகளில், பெரும்பான்மை மக்களுக்கு சகுணத் தியானமே மிகவும் பொருத்தமானது. தியானப் பொருளிலிருந்து வெருண்டோடும்-போதெல்லாம் உலகியல் பொருள்களிலிருந்து மனதைப் பன்முறை பின்னிழுத்து அத்துடன் ஒன்றச்செய்யுங்கள். இந்தவிதப் போராட்டம் மாதக்கணக்கில் நடைபெறும்.

சகுணத் தியானம்: ஏசுநாதர் அல்லது கிருஷ்ண பகவானை நீங்கள் தியானிக்கும் பொழுது, அவர்களின் படத்தை உங்கள் முன்வைத்துக் கொள்ளுங்கள். இமைகொட்டாது, நேராக அதைப்பார்த்த வண்ணமிருங்கள். முதலில் அவர் திருப்பாதங்கள், பிறகு கைகள், முகம், சிரம், மறுபடியும் கைகள், கடைசியாகத் திரும்பவும் கால்கள் என முறையே நோக்குங்கள். இதே முறையில் மறுபடியும் பார்க்கத் தொடங்குங்கள். இங்ஙனம் அரைமணி நேரத்திற்குத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். நீங்கள் சோர்வடையும் நேரத்தில், முகத்திலேயே நேராகப் பாருங்கள். இந்தப் பயிற்சியை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள். பிறகு கண்களை மூடி மானசிகமாகப் படத்தைப் பார்க்க முயலுங்கள், கண்களைத் திறந்தவண்ணம் பல உறுப்புகளையும் முறையே பார்த்ததுபோல் கண்களை மூடிய நிலையிலும் மனதினால் பார்க்க முயலுங்கள். சர்வவல்லமை, சர்வஞ்ஞத்வம், தூய்மை, பூரணத்தன்மை முதலிய கடவுளின் உயர்தன்மைகளை உங்கள் தியான நேரத்தில் நினைத்து நில்லுங்கள்.

மனவடக்கம்: தீய எண்ணங்கள் மனத்தினில் புகுமாயின் அவைகளை விரட்ட உங்கள் இச்சா சக்தியை உபயோகிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சக்தியைத்தான் இழந்து நிற்பீர்கள். உங்கள் இச்சா சக்திதான் சிதைய நேரிடும்; நீங்கள் சோர்வடையக் கூடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான முயற்சிகளைச் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமான தீய எண்ணங்கள் இரட்டிப்பு வலுவுடன் திரும்பி வந்து கொண்டிருக்கும். வெகு விரைவிலேயே அவைகள் வரவும் செய்யும். எண்ணங்கள் மிக சக்தி வாய்ந்தவையும் ஆகிவிடும். எனவே, கவனிக்காமல் இருந்து விடுங்கள். சும்மா இருங்கள். எண்ணங்கள் வேகமாக ஒவ்வொன்றாகச் சென்று மறையும். அல்லது நல்ல எதிரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். அல்லது கடவுளின் படத்தை நினையுங்கள். அல்லது, மந்திரத்தைப் பன்முறை உச்சரியுங்கள். அல்லது பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு நாளைக்காவது தியானமின்றி இராதீர்கள். ஒழுங்காகவும், முறை தவறாமலும் தியானம் செய்யுங்கள். பழங்களும் பாலும் மனஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். புலால், மீன், முட்டை முதலிய உணவு வகைகளையும், புகைபிடித்தல், மது வகைகள் முதலியவைகளையும் அறவே வெறுத்தொதுக்குங்கள். மயக்கநிலை ஏற்படுமாயின், குளுமையான நீரை முகத்தில் தெளித்து தூக்கக் கலக்க நிலையைப் போக்குங்கள். பதினைந்து நிமிடங்களுக்கு எழுந்திருந்து நில்லுங்கள். பிராணாயாமப் பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபடுங்கள். ஒரு நிமிடத்திற்குச் சிரசாசனம் செய்யுங்கள். இந்த முறைகளால் நித்திரை நிலையை வென்றுவிடலாம். இரவில் பால், பழங்களை மட்டும் உணவாகக் கொண்டால், காலைத் தியான நேரத்தில் உறக்கம்வந்து உபத்திரவிக்காது. சிநேகிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். சினிமா பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். குறைத்துப் பேசுங்கள். அன்றாடம் இரண்டு மணி நேரத்திற்கு மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். விரும்பத்தகாத நண்பர்களுடன் உறவாடாதீர்கள். நல்ல உணர்ச்சிகளைத் தூண்டவல்ல ஆத்மீக நூல்களையே படியுங்கள். இவையனைத்தும் தியானத்தை ஊக்குவிக்கும் உயரிய அம்சங்கள். தியான காலத்தில் உடம்பை ஆட்டாதீர்கள். அதைப் பாறை போன்று உறுதியாக நிலைக்கச் செய்யுங்கள். மெதுவாகச் சுவாசம் விடுங்கள். அடிக்கடி உடலைச் சொறியாதீர்கள். நேரிய மனப்போக்குடன் அமைந்து நில்லுங்கள். மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் மனஒருமைப்பாட்டுப் பயிற்சியினால் ஈடுபட முனையாதீர்கள். மனதிற்குச் சிறிது ஓய்வளியுங்கள்.

நிறைந்த நிலை: எண்ணம் மனதைப் பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அது தூல அல்லது மனோ நிலையாக மாற்றப்படுகிறது. எனவே, கடவுளைப் பற்றிய எண்ணத்தினோலயே மனதை நிரப்பிவிட்டால், வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் சமாதி நிலையை எய்துவது உறுதி. எனவே, முழு மனதுடன் முயற்சி செய்யுங்கள்.

பயிற்சியும் வைராக்கியமும்: அப்பியாசமும் வைராக்கியமும் தியானத்தின் இருபெரும் நண்பர்கள். ஒழுங்கான பயிற்சியே அப்பியாசம். உலகியல் பொருள்களிடத்திலும், புலன் வழி இன்பங்களிலும் உள்ள பற்றின்மையே வைராக்கியம். நற்பண்புகளை வளர்த்தலும் தீய குணங்களைத் தவிர்த்தலும் தியானப் பயிற்சியுடன் கூட தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் தியானப் பயிற்சியின் மூலம் நீங்கள் பெரும் பயனைப் பெற முடியும்.

இவ்வஸ்திவாரத்தை முதலில் கட்டுங்கள்: யோக ஏணியின் ஏழாவது படியே தியானம். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை என்பவையே ஏனைய ஆறுபடிகள். அன்பு, உண்மை, தூய்மை, களவாமை, பொருளாசையின்மை முதலிய நற்பண்புகளின் தொடர்ந்த பயிற்சியே யமம். அகப்புறத் தூய்மை, நிறைவு, கடும் அனுஷ்டானங்கள், மறை நூல் ஓதுதல் பகவத் சரணாகதி முதலியவற்றை ஆக்கும் நடவடிக்கைகள் தாம் நியமம். தியானத்திற்குரிய சுகமான இருக்கையே ஆசனம். ஒழுங்குபடுத்தப்பட்ட சுவாசமே பிராணாயாமம். உலகியல் பொருள்களின் மேல் பாயும் மனதைப் பின்னிழுத்து நிறுத்துதலே பிரத்யாஹாரம். மனம் ஒன்றித்த நிலையே தாரணை. அதன்பிறகு தோன்றி நிற்கிறது சமாதி நிலைக்கு இட்டு செல்லும் தியானம். எனவே நல்லொழுக்கம், அன்பு, தன்னலமின்மை, வைராக்கியம் முதலிய பண்புகளில் சிறந்து விளங்கினால் நீங்கள் தியானத்தில் வெகுவாக முன்னேறுவது எளிதாகிறது.

பிரார்த்தனை: கடவுளுடன் ஒன்றுபடுவதற்கான முயற்சியே பிரார்த்தனையாகும்.
பிரார்த்தனை மாபெரும் ஆன்மீக சக்தியாகும்.
உண்மையான தூய உள்ளத்திலிருந்து எழும் பிரார்த்தனை உடனே இறைவனால் கேட்கப்படுகிறது.
அனைத்துப் பிணிகளையும் அறவே அகற்றும் அருமருந்து இறைவனின் நாமமேயாகும். இறைவனின் நாமமே இன்பத்தின் ஊற்று.
-சுவாமி சிவானந்தர்

ஓம் தியானம்: கரையில்லாத சம்சாரமாகிய கடலில் விழுந்து தத்தளிக்கும் மனிதர்களுக்கு ஓம் அல்லது பிரணவமானது படகாக அமைகிறது. இப்படகின் உதவியால் பலர் சம்சார சாகரத்தைத் தாண்டியிருக்கிறார்கள். நீங்களும் அவ்விதம் செய்யலாம். ஓம் எனும் எழுத்தின்மீது இடைவிடாத பாவத்தோடும் அர்த்தத்தோடும் தியானம் செய்து ஆத்மனை அறிந்து மகிழ்வீர்களாக. எங்கும் நிறைந்த ஆத்மனுக்கு ஓம் எனும் எழுத்து ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த ஓம் என்பதையே சிந்தனை செய்யுங்கள். உலக சிந்தனையை விட்டு விடுங்கள். திரும்பத் திரும்ப வரமுயலும் உலக எண்ணங்களைத் தவிர்த்து நில்லுங்கள். ஆத்மனைப் பற்றியே எண்ணுங்கள். ஓம் என்பதோடு, பரிசுத்தம், பரிபூர்ணம், விடுதலை, ஞானம், மரணமின்மை, நித்தியத்தன்மை, முடிவில்லாதது போன்றவற்றைக் குறித்த எண்ணங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதில் ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அனைத்தும் ஓம் ஆகவே இருக்கிறது. ஓம் என்பது இறைவன், ஈசுவரன் அல்லது பிரம்மத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. உங்களுடைய உண்மைப் பெயரும் ஓம் என்பதேயாகும். உங்களுடைய வாழ்க்கை, எண்ணம், புத்தி அனைத்திற்கும் ஓம் என்பதே ஆதாரம். பொருள்களைக் குறிக்கும் எல்லா வார்த்தைகளும் ஓம் என்பதையே மத்யஸ்தமாக உடையவை. இதனால் இவ்வுலகம் ஓம் அல்லது பிரணவத்தில் பிறந்து பிரணவத்தில் வாழ்ந்து, பிரணவத்திலேயே ஒடுங்கியும் நிற்கிறது. ஓம் என்பது பிரஹ்மம் அல்லது பரம்பொருளுக்கு ஒரு அடையாளம். அந்த ஓம் எனும் அக்ஷரத்தின் மீது தியானம் செய்யுங்கள். அந்த ஓம் எனும் அக்ஷரத்தை நீங்கள் தியானம் செய்யும்போது பிரணவம் குறிக்கும் பிரம்மத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

குருதேவர் சிவானந்தரின் இருபது இணையற்ற போதனைகள்

1. நாள்தோறும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்திருங்கள். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அந்தக்காலம் கடவுள் தியானத்திற்கு மிகவும் உகந்தது.

2. பத்மாசனம், சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து அரைமணி நேரத்திற்கு ஜபம், தியானத்தில் ஈடுபடுங்கள். இந்தக்கால அளவை மெல்ல மெல்ல மூன்று மணி நேரத்திற்கு உயர்த்துங்கள். பிரம்மச்சர்யத்தைப் பேணவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சிரசாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்யுங்கள். உலாவுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொள்ளுங்கள். இருபது முறை பிராணாயாமம் செய்யுங்கள்.

3. ஓம் அல்லது ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாய, ஓம் நமோ பகவதேவாஸுதேவாய, ஓம் சரவணபவாய நம, சீதராம், ஸ்ரீராம், ஹரிஓம், காயத்ரி ஆகிய ஏதாவது உங்களுக்குப் பிடித்தமானதொரு மந்திரத்தை 108 தடவை முதல் 21600 தடவை வரை (200 மாலைகள் 108 = 21600) அன்றாடம் ஜபம் செய்யுங்கள்.

4. சாத்வீக உணவை உட்கொள்ளுங்கள். மிளகாய், புளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், புளிப்பான பொருள்கள், எண்ணெய், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து மிதமாக உண்ணுங்கள். மனம் அதிகமாக விரும்பும் பொருட்களை வருடத்திற்கு இரு வாரங்கள் வெறுத்து ஒதுக்குங்கள். எளிய உணவை உட்கொள்ளுங்கள். பாலும் பழமும் தியானத்திற்கு உதவும் உணவுப்பொருட்கள். வாழ்வதற்கு உரிய மருந்து போன்று உணவை உட்கொள்ளுங்கள். மகிழ்வுக்காக உண்பது பாபம். ஒரு மாதத்திற்கு உப்பையும் சர்க்கரையையும் உட்கொள்வதை விலக்குங்கள். சாதம், பருப்பு, சப்பாத்தி ஆகியவற்றில் தொடுகறி இன்றி நீங்கள் வாழ முயல வேண்டும். குழம்பிற்கு உப்பு அதிகம் வேண்டும் என்றும், தேயிலை, காபி அல்லது பாலுக்கு அதிகம் சர்க்கரை வேண்டும் என்றும் கேட்காதீர்கள்.

5. பூட்டும் சாவியும் கொண்ட தனி அறையை தியானத்திற்கு பயன்படுத்துங்கள்.

6. ரூபாய்க்கு 10 பைசா வீதமோ அல்லது உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறோ ஒவ்வொரு மாதமும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒழுங்காக தருமம் செய்யுங்கள்.

7. கீதை, ராமாயணம், பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆதித்ய ஹிருதயம், உபநிடதங்கள் அல்லது யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைத் தவறாமல் தினமும் அரைமணி நேரம் வரை பாராயணம் செய்து தூய விசாரத்தை மேற்கொள்ளவும்.

8. வீரிய சக்தியை மிக ஜாக்கிரதையுடன் காப்பாற்றவும். வீரிய சக்தியே கடவுள்; அதுவே செல்வம்; வாழ்க்கையினுடைய சாரமும் அறிவினுடைய சாரமும் அதுவே தான்.

9. பிரார்த்தனை சுலோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்து ஜபம், தியானம் தொடங்குமுன் ஆசனத்தில் உட்காரும்போதே சொல்லி வாருங்கள். இது உங்கள் மனதை விரைவிலேயே உயர்வடையச் செய்யும்.

10. தீயவர்கள் தொடர்பு, புகைபிடித்தல், புலால் புசித்தல், மதுவகைகள் அனைத்தையும் அறவே விலக்கி ஒதுக்குங்கள். தீய சுபாவம் எதையும் வளர்க்காதீர்கள். நல்லார் தொடர்பில் தொடர்ந்து நில்லுங்கள்.

11. ஏகாதசி அன்று உபவாசம் இருங்கள். அல்லது பாலும் பழமும் சாப்பிடுங்கள்.

12. கழுத்திலோ அல்லது பாக்கெட்டிலோ அல்லது இரவில் தலையணைக்கு அடியிலோ ஜபமாலை ஒன்றை வைத்திருங்கள்.

13. நாள்தோறும் இரண்டு மணி நேரமாவது மௌனத்தைக் கடைபிடியுங்கள்.

14. எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். குறைத்து பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

15. உங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் நான்கு சட்டைகள் இருந்தால் அவற்றை மூன்று அல்லது இரண்டாகக் குறையுங்கள். மகிழ்வோடும் நிறைவோடும் வாழுங்கள். வேண்டாத கவலைகளை விடுத்து நில்லுங்கள். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். உயரிய சிந்தனையைக் கொண்டு விளங்குங்கள்.

16. ஒருவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். அன்பு, பொறை, தயை இவற்றால் கோபத்தை அடக்குங்கள்.

17. வேலைக்காரர்களை நம்பி வாழாதீர்கள். தன்னம்பிக்கையே எல்லா பண்புகளுக்கும் தலையானது.

18. படுக்கைக்குச் செல்லும் முன் அன்று நீங்கள் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். பெஞ்சமின் பிராங்களின் போன்று அன்றாட டயரியையும் தன்னைத் திருத்தும் பட்டியலையும் தயாரித்து வாருங்கள். முன் செய்த தவறுகளை எண்ணி வருந்தாதீர்கள்.

19. ஒவ்வொரு நிமிடமும் கூற்றுவன் வருகையை நினைந்து நில்லுங்கள். கடமையை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் பின் வாங்காதீர்கள். நன்னடத்தையை மேற்கொண்டு ஒழுகுங்கள்.

20. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் போதும், இரவில் உறங்கச் செல்லும் பொழுதும் இறைவனை நினையுங்கள். ஆண்டவனிடம் பூரண சரணாகதி அடையுங்கள்.

ஆத்மீக சாதனைகள் அனைத்தினுடையவும் சாராம்சம் இதுவேயாகும். இது உங்களை மோட்ச வாயிலுக்கு அழைத்துச் செல்லும். இவ்வரிய ஆத்மீக நியதிகளை ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டும். இதில் எந்தவிதமான மனத்தளர்ச்சிக்கும் இடம் தரக்கூடாது.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!!

ஜகத்குரு சிவானந்தரின் பொன்னுரைகள்

1. கடவுள் உண்டு. உன்னுள்ளே கடவுள் இருக்கிறார். சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள், சுதந்தரம், அமரத்தன்மை, முக்தி எல்லாம் ஒருபொருட்சொற்கள்.
2. எப்போதும் கடவுளையே நினைத்தால் தீமைக்கே இடமிராது.
3. தொல்லை மோதும்போது நாத்திகன்கூடக் கடவுளை நினைக்கிறான்.
4. தத்துவ வாதங்களும், வாய் வீச்சும் வீணே. உள்ளாழ்ந்தே கடவுளைக் காணலாம். உண்மை உள்ளே. ஆத்மானுபவம் இல்லாத வாயளப்புப் பாண்டித்தியம் காசு பெறாது.
5. ஆத்ம சுகமே பரம சாந்தம். ஆத்ம சாந்தம் அடைந்தால், இந்திரிய விஷயங்கள் துச்சமாகத் தோன்றும். நிலையில்லாத இந்த உலகின் விஷயாதிகள் ஒருக்காலும் சுகமோ சாந்தமோ தராவாம். நீ உலகரசனானாலும் சாந்தானந்தம் வராது. மனதை அடக்கு; சித்த சுத்தி பெறு; அன்புப் பாலம் அமை; சாந்த ராஜ்யத்திற் புகு. தன்னமைதியின்றி உலகமைதியில்லை.
6. உலகம் மனோமாத்திரம்; காலம் கானல் நீரோட்டம். இறந்த காலம் இன்று கனவு போலத் தோன்றுகிறது; நிகழ்காலமும் நாளை, கனவுபோலத் தோன்றும். உலகரங்கில் போலிப் புலன்களின் விஷயகானத்திற்கு ஏற்றபடி, மனப்பேயே பல வேஷம் போட்டு ஆடுகிறது. உலகம் மாயா விலாசம்; பிரம்ம ஞானம் உதித்தால் மாயை மறையும். பிறப்பும் இறப்பும் உலக நாடகத்தின் இரண்டு காட்சிகளாகும். உலகைக் கண்டு அஞ்சாதே, மயங்காதே. உன் சொரூபத்தை அறி; அது சச்சிதானந்தம்.
7. சள சள வென்று பேசாதே; அது உன் சக்தியை வீணாக்கும். நூறாண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பது மேல். ஊண், உறக்கம், பேச்சு, செயல் அனைத்திலும் மிதமாயிரு. அளவறிந்து வாழ். சாதனம் செய்.
8. உலகம் வேறு - நீ வேறு என்று எண்ணாதே; மன விகாரத்தை ஒழி. ஏகரச பாவனையே இன்பம். அனைத்திலும் தானான ஆன்மாவைக் காண்பதுவே மனித வாழ்வின் இலட்சியமாகும்.
9. உடல், மனம், உள்ளம், ஒழுக்கம், ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்; முறையாகப் பயில். இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
10. ஞானத்தால் அஞ்ஞானம் ஒழிதலே துன்பமொழிந்து இன்பம் வளரும் வழி. அவித்தையாலே தான் மனிதன் துன்ப வெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கிறான். அந்தரங்கத்தில் எல்லாரும் ஞானவான்களே! அதனாலே தான் முட்டாள் கூடத் தன்னைக் கெட்டிக்காரன் என்று நினைக்கிறான்.
11. உலகில் பல துக்க அனுபவங்களால் மனிதன் புத்தி தெளிகிறான். அனுபவம் அறிவைத் தருகிறது. இடர்களைப் பொறுப்பதால் மனத்திட்பமும் கடவுளுறுதியும் உண்டாகும்; அகம்பாவம் ஒழியும். இடர் வரும்போது கலங்காதே; தைரியமாக வெல். ஒவ்வொரு இடரும் மனவுறுதியைத் திண்மையாக்கும் சாதனமாகும். வைரவுறுதியுடன் இடர்களையும் அபாயங்களையும் எதிர்த்து நின்று வெற்றி கொள். எப்போதும் மகிழ, தொல்லைகளை நகைத்தொழி. மூடக் கோழை போல முனங்காதே. தீரனாயிரு.
12. நானா பாவனை செய்வது மனமே. மனம் பிரம்மத்தினின்றே தோன்றி, சங்கற்பமாக விரிகிறது. மனம் ஸம்ஸ்கார மூட்டை. சித்த விருத்திகளின் சமுதாயம். மனம் நிலையற்றது. அது நிமிஷத்திற்கு நிமிஷம் உருவும் நிறமும் மாறுகிறது. மனம், கண்ணிமைப்பதற்குள் உலகை ஆக்கும்-நீக்கும். மனம் ஜடமே. சைதன்யப் பிரம்மத்தாலே தான் அது அறிவுள்ளதாகக் காண்கிறது. மனத்தின் உள்ளுருவே உணர்வு; புறவுருவே உலகம்.
13. உருக்கிய தங்கம் எதில் வார்த்தாலும் அதன் உருக்கொள்கிறது. அதுபோல் மனமும் எந்த விஷயத்தை நினைக்கிறதோ, அதன் உருவையடைகிறது. ஆரஞ்சை நினைத்தால் உடனே அது ஆரஞ்சுப் பழமாகிறது. பொறாமை கொண்டால் பொறாமைத் தீயாகிறது. யார்மேல் பொறாமையோ அவர் தீமையெல்லாம் அதற்கும் வந்து சேருகிறது. ஒரு பெண்ணை நினைத்தால் மனமே பெண்மயமாகிறது. எந்த குணதொந்த விகாரத்தை நினைத்தாலும் மனம் அதுவாகிறது. கடவுளையே நினைத்தால் மனம் கடவுள் தன்மை பெறுகிறது. முதலில் தாமஸ-ராஜஸ நினைவிலிருந்து மாற்றி, மனதை ஸாத்வீக மயமாக்க வேண்டும். சாத்வீக மனது சுத்த மனதாகும். பிராணாயாமம், தியானம் முதலிய சாதனங்களால் சித்தசுத்தியும் மனஒருமையும் பெறலாம்.
14. சித்த சுத்தியும் ஏகாக்ரமும் இருந்தால், மனதை நல்ல பாவனையில் திருப்பலாம். கருணை, அன்பு, பக்தி, பரோபகாரம் முதலிய நல்ல குணங்களில் மனதைச் செலுத்தினால், அந்தந்தக் குணவடிவுகளைக் கொண்டு மனம் சீர் பெறும் மனம் மின்சாரத்தை விட வலியது. மனம் நினைவின் ஆட்டம், நினைவு எப்படி. வாழ்வு அப்படி. தீய நினைவால் வாழ்வே தீமையாகும். நல்ல நினைவால் வாழ்வெல்லாம் நலமாகும். ஆத்திரம், பொறாமை, வஞ்சம், காமக் குரோதாதி நினைவுகளால் மனம் நரகமாகி, வாழ்வும் எமகண்டமாகும். சாந்தம், தெய்வ பக்தி முதலியவற்றால் மனம் சக்தி பெற்று, வாழ்வும் நிம்மதியாக நடக்கும். மனதைப் பண்படுத்துவதே வாழ்வைப் பண்படுத்துவதாகும். மனம் போல மங்கலம்.
15. பெரும்பாலோர் மனதை வெளியே அலைய விட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள். மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும். பிராணனாகிய கடிவாளத்தை இழுத்துப் பிடித்து, மனக்குதிரையை அடக்க வேண்டும். உலகில் காணும் கட்சிப் போர்கள் ராஜஸ மனத்தின் வேலையாகும். ஒரு குரு, ஓர் இடம், ஒரு சாதனத்தில் தீவிரமாக நின்றால் மனம் படிமானத்திற்கு வரும்.
16. சொற்படி நினைப்பு; நினைவின்படி செயல் நிகழ வேண்டும். உண்மை யொழுக்கத்தால் மனம் அடங்கி நடக்கும். மலையை உன்னால் தகர்க்க முடியாது. ஆனால் மலை நினைப்பைத் தகர்க்கலாம். நினைப்பெல்லாம் ஒழிந்து நிச்சிந்தையானால் மனம் என்பதே இராது.
17. மனதிற்கு அடிமையாகாதே. சித்த விருத்திகளை அடக்கு; மனதை மிஞ்ச விடாதே. நிந்திப்பவன் மனம் நித்திக்கத்தக்க தீமையுள்ளது.
18. செருக்கை விடு; செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு, சாத்வீக அகங்காரம் ஆபத்தானது. மனத்தொல்லை மனிதனைக் கெடுக்கும். மனம், சினம், ஆத்திரம், பொறாமையுற்றால் இரத்தம் கொதித்து விஷத்தன்மையுறும்.
19. அச்சத்தை வென்றவன் மனதையும் வெல்வான்; அனைத்தையும் பெறுவான். தைரிய உணர்ச்சி அச்சத்தை மாற்றும் மருந்தாகும்.
20. புலனடக்கமின்றி எதுவும் நிறைவேறாது. மனமின்றி புலன்கள் தாமே ஒன்றும் செய்ய முடியாது. மனத்தை அடக்கினால் புலன்களும் அடங்கிப் போகும். மனப்புலன்கள் அடங்கினாலே சுத்தாத்ம நாதம் கேட்கும். பொறி புலன்களை அடக்கு. மனதை நிச்சலமாக்கு; உள்ளே ஆழ்ந்து தியானி; அமரானந்த அமுதுண்.
21. மனிதன் காமத்திற்கு அடிமையாகிக் கெட்டான். காமக்குழியில் விழ, விழ நைப்பாசை அதிகரித்து, அதை அடக்குவதே கடினமாய் விடும். வாளையும், சீறும் பாம்பையும் விடச் சினமும் காமமும் அபாயமானவை. காமசிந்தனையே ஒழிய வேண்டும்; அப்போதுதான் சாதனம் இயலும்.
22. பிரமசரியமே பரிசுத்தம்; அதுவே பரமசாந்தம். பிரமசரியத்தால் தேஜஸ் வளரும்; யோக சக்தி மிகும்; உன்னத நிலை அடையலாம். வீரியபலமே பேரின்பத் திறவுகோல். காமத்தை முற்றிலும் வென்றவன் பிரம்மமேயாகிறான். நல்ல காரியங்களில் சதா ஈடுபட்டிருத்தல் பிரமசரியத்திற்கு ஒரு வழியாகும்.
23. ஆசையே விஷயப் பற்றாகும். ஆசையறுந்தால் ஆனந்தம். ஆசை மேவிய ராஜஸ மனிதன் ஒருக்காலும் அத்யாத்ம வாழ்வு பெற மாட்டான். ஆசை ஒரு சித்தவிருத்தி; அமைதிக்குப் பகை. போகத்தால் தணியாது. ஆசாபாச முனைப்பால் பலர் யோகமிழந்தனர். வாஸனாத்ரயங்களைக் கிழித்தெறிந்து ஊன் கூட்டை விட்டுச் சிங்கம் போல் வெளியே வருக. நிராசையாளனே உலகில் நிறைவான செல்வன். ஆசையை வென்ற முனிவன் அடையும் சுகத்தை இந்திரன்கூடப் பெற முடியாது.
24. எல்லாரும் உலகில் துன்பமொழிந்த இன்பம் வேண்டுகின்றனர். பற்றினாலே தான் நோவுத் துயரும் பந்தமும் உண்டாகின்றன. தேகாத்ம புத்தியும் தற்போதமுமே துன்பத்திற்குக் காரணமாகும். சுக துக்கங்களைச் சமமெனக் காண். இசை வசைகளைப் பாராட்டாதே. உலகை மகிழ்விப்பது கடினம். சங்கரர், ராமகிருஷ்ணாதி மகான்களையும் உலகம் பழிக்கிறது! உலகைத் திருப்தி செய்ய முடியாது; ஆத்ம திருப்தி பெறு.
25. ஏகாக்ர தியானமே நித்யானந்த அமர நிலைக்கு வழியாகும். பரமாத்ம தியானமே துக்க நிவர்த்தி தரும். ஜபமாலையைவிட லிகித ஜபத்தில் ஏகாக்ரம் அதிகமாகும். இயம நியமாதிகளைப் பயின்றாலே தியானம் கைகூடி வரும். மனம் தொல்லையற்று நிலைத்தாலே தியானம் ஓடும். மனோலயம், தியானப் பொருளில் மனதை ஈடுபடுத்தும். மனோ நாசமே பிரம்ம ஞானமும் முக்தியுந்தரும்.
26. கடவுள் அன்பருக்கு உருவாக, அறிஞருக்கு அருவாக உணர நிற்கும், பக்தர் தியானத்திற்கே பிரம்மம் பல பெயர் வடிவ பேதங்களாகத் தோன்றுகிறது. பெயர் வடிவங்கள் பலவானாலும் சத்துப்பொருள் ஒன்றே. ஒன்றையே தியானித்து அதிலேயே லயித்துக் கலப்பதே இன்பம்.
27. ஓங்காரத் தியானம் பிரம்மஞானந்தரும்; ஆத்ம தியானம் நித்திய அமரானந்தம் அளிக்கும். தீவிர வைராக்கியமான ஓமக் குழலால், தியானாக்னியைத் தூண்டுக. சூக்ஷ்மமான சுத்தபுத்தி பிரம்மத் தியானத்திற்கு அவசியமாகும். சிரவணமனன-நித்தியாசனங்களும் வைராக்கியமும் சித்தித்த பிறகே, தியானமும் சித்திக்கும்.
28. மனோராஜ்யம் தியானத்திற்குக் கெடுதல். நினைப்பற்ற நிம்மதியிலே தான் தியானமும் நிலைக்கும். கர்மம் ஆரம்பிகளுக்குத் துணையாகும்; யோகாரூடர்களுக்கு இடராகும். பழைய நினைவுகளை விலக்கு. வி÷க்ஷபத்திற்கு இடந்தராதே. மெல்ல மெல்லப் பக்குவமாகத் தியானத்தைத் தீவிரமாக்கு.
29. தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே. நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி. ஆனால் ஒளிக்காட்சி பிரமாதமானதில்லை. தீவிர தியானத்தால் மனம், மூளை நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்; அமைதி நிலைக்கும்.
30. மனம் தியானத்தில் முழுதும் கரைந்து போதலே சமாதியாகும். சமாதி என்பது கல்லைப் போல் உட்கார்ந்திருப்பதன்று. சமாதியில் ஜீவாத்ம - பரமாத்ம ஐக்கியம் உண்டாகிறது. சமாதியில் தற்போதும் இழந்து அருட்போதம் உதித்து, அறிபொருளுடன் அறிவு கலந்து ஒன்றிப் போகிறது. நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணங்களை யோகி வெல்கிறான்.
31. உலகாயதர் உறவை நீக்கு; மகாத்மாக்களான புனிதர் உறவை நாடு. நல்லார் உறவே பரமபாவனமாகும். நல்லாரைக் காண்பதுவும் நன்றே. தீயாரைக் காண்பதுவும் தீதே.
32. ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும். திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும். சுயநலத்தையும் அகம்பாவத்தையும் உதறித் தள்ளி, தெய்வத்தைச் சரண்புகு. நிஷ்காம்ய கர்மமும் பரோபகாரமும் செய். அருள் வளரும்.

குருதேவர் சிவானந்தர் எழுதிய நாட்குறிப்பில் சில :

1. தொண்டு செய்; நாராயணராக நரரை நினைத்துத் தொண்டு செய்; சிவமயமாக சீவரை அன்பு செய்.
2. சாதிமத பேதம் பாராது தொண்டுசெய்; பங்கி, பாவி. போக்கிரி, சாக்கிலி, ஏழை எளியவர் அனைவருக்கும் தொண்டு செய்.
3. குறித்த நேரத்தில் குறித்ததைச் செய். காலத்தை வீணாக்காதே; வைத்திய உதவிக்கும் இரண்டொரு மணிநேரமே ஒதுக்கு; தியானம் பக்தி-சாதனமே முதன்மை.
4. பகைக்காதே; யாரையும் வெறுக்காதே; பிறர் துன்புறுத்தினாலும் நன்மையே நினை! தீமையை நினைக்காதே; மனப்புண்ணை மற; சுயாபிமானத்தைத் துற; குழந்தை போல மாசற்று, சூதுவாதற்றிரு.
5. ஏட்டிக்குப் போட்டி செய்யாதே. துன்பங்களைப் பொறுத்திரு.
6. தூற்றல், வசை, பழி, தீக்குறளை - எல்லாம் பொறு. தீமைக்கும் நன்மையே செய்.
7. அக்ரோதம் நிர்வைரம் இரண்டும் அமைதியைத் தரும்.
8. பணிவு மட்டு மரியாதை, நன்மை பெருந்தன்மை, சாத்வீகம், நளினம், மென்மை, கருணை - உதவி இவற்றை எங்கும் காட்டு.
9. சளசளப் பேச்சை விடு. கேட்டதற்கு உரிய மறுமொழி சுருக்கமாய்ச் சொல்லிச் சும்மா இரு; வாதாடாதே.
10. எல்லாம் சிவமயம்; பிரம்மமயம் என்றுணர். எல்லோரையும் வணங்கு. மேல் கீழ் பாராதே.
11. தியாகமே மோட்சத்திற்கான திறவுகோல்.
12. ஆசையற்றவனே அகில உலகிம் பெரும் பணக்காரன்.
13. உண்மை பக்தன் ஒருவரையும் வெறுக்க மாட்டான்.
14. நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படியே ஆகிறீர்கள்.
15. உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக ஆற்றல் படைத்தது.
16. சமயம் என்பது கடவுளில் வாழ்வதாகும். அது வெறுமனே கடவுளைப் பற்றி பேசுவதல்ல.

(இமயஜோதி சுவாமி சிவானந்தர்)

தனிமையும் தியானமும்!



ஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி அடைந்தனர். உலகின் மூலமாகவே உண்மையை உணர வேண்டும் என்பதே கீதையின் நடுநாயகமான போதனை. இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி மக்களால் செய்யத்தக்கதன்று. சொல்லுதல் எளியது. ஆனால் செய்வது கடினம். எத்தனை ஜனகர்களும் ஏசுநாதர்களும் தோன்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் உண்மையில் யோகப்பிரஷ்டர்கள். பெரும்பான்மை மக்களுக்கு இது அசாத்தியமானதொன்றாகும். ஏசுநாதர் பதினெட்டு வருடங்கள் மறைவில் இருந்தார். புத்தர்பிரான் எட்டு வருடம் உருவலாக் காட்டில் தனித்திருந்தார். சுவாமி ராமதீர்த்தர் இரண்டு வருடங்கள் பிரம்மபுரி (இமாலயம்) காட்டில் ஏகாந்தமாக வாழ்ந்தார். செயல்களுக்கு நடுவிலேயே ஆத்மானுபூதியைப் பெற வேண்டுமெனத் தெரிவித்த அரவிந்தர் இருபது வருடங்களுக்கு மேல் தனி அறையினுள் தனித்திருந்தார். சாதனைக் காலங்களில் பலரும் ஏகாந்தத்தையே போற்றியுள்ளனர். உலகில் இருந்து கொண்டே ஆரம்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சிறிது முன்னேறியதும், ஆத்மீக அலைகளும் தனிமையும் கொண்டதோர் பொருத்தமான இடத்தை உயர் சாதனைகளுக்காக நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இளமையில் மதக்கட்டுப்பாடின்மை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதபோதனையின்மை, உலகாயதச் செல்வாக்கின் ஆதிக்கம் இவை காரணமாக பலரிடத்திலும் இச்சா சக்தி பலம் குன்றி விட்டதால் இடைவிடாத ஜபம், தொந்தரவற்ற தியானம் முதலியவற்றைப் பயிற்சி செய்ய சில வாரங்கள், மாதங்கள், வருடங்களுக்கு ஏகாந்தமாகச் செல்வது அவர்களுக்கு இன்றியமையாத தொன்றாகும்.

மௌனத் தியானத்தினால் பொங்கி எழும் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், எழுச்சிகளையும், உணர்வுகளையும் சாந்தப்படுத்துங்கள். ஒழுங்காகவும், படிப்படியாகவுள்ள பயிற்சியினால் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்குப் புத்துயிரூட்டலாம். உலகியல் தன்மை முழுவதையும் நீங்கள் தெய்வீக நிலைக்கு மாற்றலாம். நரம்பு மையங்கள், நரம்புகள், நரம்போட்டங்கள், தசைகள், பஞ்சகோசங்கள் உணர்ச்சிகள், எழுச்சிகள், உணர்வுகள் மீது தியானத்தின் மூலம் உயர்ந்த ஆதிக்கம் செலுத்தலாம். தம் மக்களை நல்வாழ்க்கையிலிருத்தியவர்களும், உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களும், உலகத்தின்கண் எவ்விதப் பற்றுதலில்லாதவர்களும் தூய்மைக்காகவும், ஆத்மானுபூதிக்காகவும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஏகாந்தத்திலிருந்து கடினத் தியானத்தையும், தபஸ்ச்சர்யத்தையும் அப்பியசிக்கலாம். இது உயர்கல்விக்காகக் கல்லூரியில் புகுதலைப் போன்றது. தவம் முடிந்த பின், ஆத்ம ஞானத்தை அடைந்த பின், அவர்கள் வெளிப்போந்து தங்களது அறிவையும் ஆனந்தத்தையும் பிறருடன் பகுத்துக்கொள்ள வேண்டும். தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு அவர்கள் சொற்பொழிவுகள், சம்பாஷணைகள், உரையாடல்கள், மௌன மன உரையாடல்கள் மூலம் ஆத்மீக அறிவைப் பரப்பலாம். விடுமுறை நாட்களிலோ, முழு நேர சாதகனால் வருடம் பூராவுமோ அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்போ தன் வீட்டிலேயே ஏதாவது ஒரு தனித்த அறையில் அல்லது ஒரு புண்ணிய நதியின் கரையிலோ அமர்ந்து, ஆன்மீக ஆர்வமும் யோகத் தன்மைகளும் பொருந்தப்பெற்ற கிருஹஸ்தன் தியானத்தைப் பயிலலாம்.

ஆழ்ந்த சாதனைக்குரிய ஆன்மீக வேட்கையுடன் கூடிய ஒரு கிருஹஸ்தராயிருந்து, தியானத்தில் பயிற்சி பெற ஏகாந்தத்தை நீங்கள் நாடுவீர்களேயானால், உங்கள் உறவினர்களுடன் உடனேயே உறவை அறுத்து விடுங்கள். திடீரென்று உலக ஆசாபாசங்களை உதறித் தள்ளுதல் உங்களுக்குத் தாங்க முடியாத துன்பத்தையும், உங்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். படிப்படியாக நீங்கள் பந்தங்களை அறுத்தெறிய வேண்டியதிருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கோ தனிமையாக இருங்கள். படிப்படியாகக் கால அளவை உயர்த்துங்கள். பின் அவர்கள் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை உணரமாட்டார்கள். அவா, ஆசை, பேராசை முதலியவற்றிலிருந்து ஒரு சாதகன் அகன்று நிற்றல் வேண்டும். பிறகே, அவன் நிøயான மனதைக் கொண்டிருப்பான். அவா, ஆசை, பேராசை முதலியவை மனதை எப்பொழுதும் நிலையற்றதாகவும், குழப்பம் பொருந்தியதாகவும் ஆக்குகின்றன. அவை சாந்திக்கும், ஆத்மஞானத்திற்கும் எதிரிகள். அவன் மிகுந்த உடைமைகளையும் கொண்டிருக்கக்கூடாது. தன் சரீரத்தைப் போஷிப்பதற்கு உண்டான பொருள்களையே அவன் பெற்றிருக்க வேண்டும். உடைமைகள் அதிகமாக இருக்குமேயானால், மனம் அப்பொருள்களைப் பற்றியும், அவைகளைக் காக்கும் விதத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கும். ஏகாந்தத்தின் பொழுது தியானத்தில் சீக்கிரமாக முன்னேற விரும்புகின்றவர்கள் பத்திரிகைகள் படித்தல், குடும்பத்தினர், நண்பர்கள், உடைமைகள் முதலியவற்றைப் பற்றி எண்ணுதல் முதலியவை மூலம் உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருத்தல் கூடாது.

தன் தேவைகளைக் குறைத்தவன் எவனோ, உலகத்தின் பொருட்டு பற்றுதல் சிறிதும் எவனிடத்தில் இல்லையோ, பகுத்தறியும்பான்மை, வைராக்கியம், விடுதலைக்கான வேட்கை முதலியவைகளை எவன் கொண்டிருக்கிறானோ, மாதக்கணக்காக மௌனத்தை எவன் கடைப்பிடித்து இருக்கிறானோ, அவனால் தான் தனித்து இருக்கமுடியும். சாதகன் அமைதியே உருவாக அமைதல் வேண்டும். அமைதி மிகும் மனத்தில் தான் தெய்வீக ஒளி நின்று பிரகாசிக்கும். பற்றுதல்களை ஒழித்ததும் அமைதி உதயமாகிறது. அவன் பயமற்றவனாகவும் அமைய வேண்டும். இது மிக முக்கியமான தகுதியாகும். கோழைத்தனம் மிகும் பயம் மிக்க சாதகனொருவன் ஆத்மானுபூதிக்கு வெகு தொலைவிலிருக்கிறான். சாதகன் தனது சரீரத் தேவைகளைப் பற்றிக் கவலையுறுதல் கூடாது. எப்பொருளும் இறைவனால் அளிக்கப்படுகின்றன. இயற்கை அன்னையால் எல்லாம் முன்னாலேயே தயாரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லோருக்கும் வேண்டிய சரீரத் தேவைகளெல்லாவற்றையும் அவர்கள் செய்வதை விட மிகச்சிறந்த முறையில் அவள் கண்காணித்து வருகின்றனர். சீரிய முறையில் தேவைகள் என்ன என்பதை அவள் அறிந்து கொண்டு அவைகளை அவ்வப்பொழுது அளிக்கின்றாள். அன்னையின் மாயாஜால வழிகளை உணர்ந்து, தெளிவடையுங்கள். அவளது தனித்த இரக்க சுபாவம், கருணை, பரிவு முதலியவற்றிற்கு நன்றி பாராட்டுங்கள்.

சுக்கிலம் நரம்புகளையும், மூளையையும் சீர்படுத்தி மண்டலத்தை ஊக்குவிக்கிறது. பிரம்மச்சரிய விரதத்தினால் சுக்கிலத்தைப் பாதுகாத்து ஓஜஸ சக்தியாக மாற்றிய ஒருவன் நீண்ட காலத்திற்கு ஒழுங்கான தியானத்தைப் பயிற்சி செய்யலாம். அவனே யோகம் என்ற ஏணியில் ஏறமுடியும். பிரம்மச்சரியமின்றி ஆன்மீக முன்னேற்றம் அணுவளவேனும் ஏற்படுவது அசாத்தியம். தியானம், சமாதி முதலிய உயர் கட்டிடங்கள் எழுப்பப்படுவதற்கு பிரம்மச்சரியமே அடித்தளமாகும். உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு, அறியும் தன்மையையும் இழந்து குருடர்களாகையில் உண்மையிலேயே ஒரு பெரிய ஆன்மீகப் பொக்கிஷமான இந்த ஜீவாதாரச் சக்தியைப் பலர் இழக்கின்றனர். அந்தோ! பரிதாபம் அவர்கள் நிலை! யோகத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் அவர்கள் அடையமுடியாது. தொடர்ந்த உண்மையான தியானத்தைச் செய்யத் தொடங்கும் முன் ஒழுங்கான பயிற்சியின் மூலம் சரீரத்தை அடக்கத் தெரிய வேண்டும். உறுதியான ஆசனமின்றி நீங்கள் தியானத்தைப் பயில முடியாது. சரீரம் ஒரு உறுதியான நிலையிலில்லாதிருந்தால் மனமும் நிலையில் நில்லாது. மனத்திற்கும் சரீரத்திற்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சரீரத்தை சிறிதளவேனும் அசைத்தல் கூடாது. அன்றாடப் பயிற்சியினால் நீங்கள் ஆசனத்தில் வெற்றி கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சரீரம், தலை, கழுத்து முதலியவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்திருந்தால் முதுகெலும்பும் நேராக இருக்கும். சுஷும்னாவின் மூலம் குண்டலினி நேரடியாக மேலே கிளம்பும், நீங்கள் நித்திரையினால் ஆட்கொள்ளப்படமாட்டீர்கள். பிரத்யாகாரம் என்ற புலன்களை அடக்குதலாகிய பயிற்சியில் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினால் உங்கள் முழு ஆணையின் கீழ் புலன்களைக் கொண்டு விளங்கினால், சந்தடியும் சச்சரவும் மிகும் ஒரு பெரும் நகரத்திலாயினும் மாபெரும் சாந்தியை நீங்கள் காண்பீர்கள். புலன்கள் அடக்கப்படாமலும், புலன்களை அடைக்கும் திறன் உங்களிடம் இல்லாமலும் இருந்தால் சாந்தியின் உறைவிடமாகத் திகழும் இமயமலைக் குகைகளில் கூட சாந்தியை நீங்கள் அடையமாட்டீர்கள்! மனத்தையும் புலன்களையும் அடக்கிய யோகி ஒருவனால் தனித்த குகையில் மனச்சாந்தியை அனுபவிக்க இயலும். மனத்தையும் புலன்களையும் அடக்காத ஒரு காமுகன் ஒரு மலையின் தனித்ததோர் குகையில் வாசம் செய்யினும் ஆகாயக் கோட்டைகளையே கட்டிக் கொண்டிருப்பான்.

நீங்கள் உங்கள் பார்வையை உங்கள் மூக்கு நுனிக்குத் திருப்பி, மனத்தை ஆத்மனிலேயே ஒன்றுபடச் செய்ய வேண்டும். அத்தியாயம் 25வது பாடலில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் :- மனத்தை ஆத்மனிலேயே நிலைக்கச் செய்து, மற்றொன்றையும் எண்ணாது வாளா இருப்பீர்! புரூமத்திருஷ்டி அல்லது இருகண் புருவங்களுக்கு இடையிலும் பார்வையை நிலைக்கச் செய்தல் மற்றோர்விதப் பார்வையாகும். இது கீதையில் விவரிக்கப்படுகிறது. இவ்விதப் பார்வையில் மூடிய கண்களுடன் பார்வையை ஆஜ்ஞா சக்கரத்தை நோக்கித் திருப்புங்கள். திறந்த கண்களுடன் இதைச் செய்ய முற்படுவீர்களேயாகில் தலைவலி உண்டாக ஏதுவாகும். புறப்பொருள்கள் கண்களில் விழ நேரிடும்; மனச்சிதைவும் நேரிடலாம். கண்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். மெதுவாகப் பயிலுங்கள். மூக்கு நுனியில் மனஒருமைப்பாட்டை நீங்கள் பயிலுங்கால், நறுமணமொன்றை அனுபவிப்பீர்கள். ஆஜ்ஞா சக்கரத்தில் பயிலுங்கால் திவ்யஜோதியைக் கண்டுகளிப்பீர்கள். உங்களுக்கு ஊக்கமளிக்கவும் ஆன்மீகப் பாதையில் உங்களை உந்தித் தள்ளவும், உயரிய பூவுலகத்திற்கும் உயரிய பொருட்களுக்கு உங்களை மாற்றவும் இது ஒரு அனுபவமாகும். இப்பொழுது உங்கள் பயிற்சியை நிறுத்திவிடாதீர்கள். பகவான் சிவனைத் தியானிப்பவர்களும், ஆஜ்யா சக்கரத்தில் மனத்தை ஒருமைப்படுத்துபவர்களுமாகிய பக்தர்களே யோகிகளாவார்கள். சிதறுண்ட மனத்தின் பற்பல கதிர்களை ஒன்று திரட்டி மனத்தை ஒரு நிலையிலிருக்கச் செய்யுங்கள். இடைவிடாது மனத்தைப் புலன்வழிப் பொருள்களிலிருந்து பின்னிழுத்து உங்கள் லக்ஷியத்தில் அதை நிலைக்கச் செய்யுங்கள். படிப்படியாக நீங்கள் மன ஒருமைப்பாட்டைப் பெறுவீர்கள். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் பயிற்சியில் நீங்கள் வெகு ஒழுங்காக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும். மிகச்சிறந்த தேவைகளில் ஒன்று ஒழுங்குமுறையாகும். அன்றாடம் விசாரம், சுய ஆராய்ச்சி மூலமாக மனப் பழக்கவழக்கங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மனத்திற்குரிய விதிமுறைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பின், சுற்றித் திரியும் மனத்தைப் பிடித்து நிறுத்துதல் மிக எளிதாக இருக்கும். உலகப் பொருள்களை வெகு முயற்சியுடன் மறக்க முயற்சித்து தியானத்திலமருங்கால் ஒவ்வாத பல உலக எண்ணங்கள் உங்கள் மனதில் எழுந்து, தியானத்தைக் கலைக்கத் தலைப்படும். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல வருடங்களுக்குமுன் நீங்கள் கொண்ட பல எண்ணங்கள், கடந்த கால இன்பங்களின் பழைய ஞாபகங்கள் முதலியன தோன்றி மனத்தைப் பல திசைகளிலும் சுற்றித் திரியவைக்க முயலும். அடிமனத்தில் படர்ந்திருக்கும் எண்ணங்கள் நினைவுகளது களஞ்சியத்தின் கள்ளக்கதவானது திறக்கப்பட்டு உள்ளேயிருக்கும் எண்ணங்களின் பண்டகசாலையின் மூடியானது தூக்கப்பட்டு தொடர்ந்து அருவிபோன்று எண்ணங்கள் பீறிட்டு வெளி வருவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவற்றை எவ்வளவுக் கெவ்வளவு அடக்க முனைகின்றீர்களோ, அதற்கு இரட்டித்த மடங்கு திறனுடனும், வேகத்துடனும் அவை பொங்கியெழும்.

அதைரியமடையாதீர்கள். நம்பிக்கையை ஒருபொழுதும் இழந்துவிடாதீர்கள். ஒழுங்கான இடைவிடாத தியானத்தினால் அடிமனத்தை நீங்கள் சுத்தம் செய்யலாம். தவிர, மற்ற எண்ணங்களையும் நினைவுகளையும் அடக்கியாளலாம். தியானத்தீயானது எல்லா எண்ணங்களையும் எரித்து விடும். இதில் உறுதிகொள்ளுங்கள். நஞ்சு கலந்த உலக எண்ணங்களை அழிக்கவல்ல சக்திமிகும் மாற்று மருந்தே தியானம். இந்த உண்மையை நினைவிலிருத்துங்கள். உள்ளே துருவி ஆராயும் போது ஒருவகையான எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்குள்ள மனத்தின் அதிவேகமான தாவுதலை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மனத்தை செவ்வனே சீர்படுத்தவும், எண்ணங்களையும் மனச்சக்தியையும் தெய்வீகக் கால்வாயில் திருப்புவதற்குமான ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு இங்குதான் மறைந்து கிடக்கிறது. நீங்கள் எண்ணங்களை மறுமுறையும் சரிசெய்து புதிய சாத்வீக அடிப்படையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தலாம். களைகளை அகற்றித் தூரே எறிந்து விடுதல் போன்று, உபயோகமற்ற உலகியல் எண்ணங்களை வெளியே நீங்கள் எறிந்து விடலாம். உங்கள் மனமாகிய தெய்வீகப் பூங்காவில் சீரிய தெய்வீக எண்ணங்களை நீங்கள் அபிவிருத்தி செய்யலாம். இது மிகவும் பொறுமையான வேலையாகும். உண்மையிலேய இது ஒரு பிரம்மாண்டமான வேலையாகும். திருவருளையும், இரும்பு போன்ற இச்சாசக்தியையும் கொண்ட தன்னில் நிலைத்த யோகிக்கு அது ஒரு பொருட்டன்று. அழியா ஆத்மனில் செய்யப்படும் தியானமானது வெடி வைத்துத் தகர்த்தெறியும் இயந்திரமாகும். தவிர அடிமனத்தில் எண்ணங்கள் பலவற்றையும் கடந்த கால நினைவுகளையும் அது வெடி வைத்துத் தகர்த்தெறிந்து விடும். எண்ணங்கள் உங்களை மிகவும் துன்புறுத்துமேயாகில் அடக்குமுறையினால் அவைகளை அடக்காதீர்கள். சினிமா பார்ப்பதைப் போன்று மௌனசாட்சியாக விளங்குங்கள். படிப்படியாக அவை அடங்கி விடும். பின் ஒழுங்கான மௌனத் தியானத்தின் மூலம் அவைகளை வேரோடு அறுத்தெறிய முற்படுங்கள். பயிற்சி இடைவிடாது தொடர்ந்து செய்யப்படல் வேண்டும். அப்பொழுதுதான் நிச்சயமாகவும் சீக்கிரமாகவும் ஒருவன் ஆத்மானுபூதியை அடையமுடியும். தினம் தினம் தியானத்தைச் சில நிமிடங்கள் மாத்திரம் விட்டு விட்டுச் செய்யும் ஒருவனால் யோகத்தில் எவ்விதப் பலனையும் அடையமுடியாது.

உணர்ச்சிகளின்றிச் சூனியமாக விளங்கும் ஒருவனிடத்தில் எவ்வாறு புலனடக்கத்தைப் பரிசீலிக்க முடியும்? குகையில் ஏகாந்தத்தில் திகழும் யோக சாதகனொருவன் பூரண பக்குவத்திற்குப் பிறகு சந்தடி மிகும் சமவெளிகட்குச் சென்று தன்னைத் தானே சோதனை செய்து கொளல் வேண்டும். ஆனால் தினந்தோறும் தண்ணீர் ஊற்றிய பிறகு குளம் செடியொன்று வேர் விட்டு விட்டதா இல்லையா என்று பார்ப்பதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிப் பார்த்த ஒருவனைப்போல் அந்தச் சாதகன் அடிக்கடித் தன்னை இவ்விதம் பரிசீலித்துக் கொள்ளவும் கூடாது. மனவடக்கம், புலனடக்கம் முதலியவற்றாலும் இடைவிடாத ஒழுங்கான தியானத்தினாலும், நீங்கள் எல்லோரும் யோகத்தில் வெற்றிபெற்று நிர்விகல்ப சமாதி அல்லது இறைவனுடன் பேரின்பக் கலப்பபைப் பெறுவீர்களாக.

மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?



புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. தனித்த புலன்மேல் பதிவிலிருந்து ஏற்படும் விழிப்புகளின் சேர்க்கைகள் மிகவும் சிக்கலானவை. புலன்களின் வழியாக ஏற்படும் மனஎழுச்சிகளை தியான சமயத்தில் வெறுத்தொதுக்குங்கள். எந்தவித கருத்துக்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டொழியுங்கள். வேறு எண்ணமின்றி கடவுளது ஒரே எண்ணத்திலேயே மனோசக்தி முழுவதையும் ஒன்றச் செய்யுங்கள்.

மற்றெல்லா புலன்வழிப் பதிவுகளையும் எண்ணங்களையும் தவிருங்கள். மனத்தின் அடிப்படையில் எழும் எதிர்ச் செயல்களினின்று தோன்றும் சிக்கல்களை அகற்றுங்கள். மனதிலிருந்து ஒரே எண்ணத்தை மாத்திரமே பிரித்தெடுங்கள். மனதில் மற்றெல்லா தொழில்களையும் மூடிவிடுங்கள். இப்பொழுது மனம் ஒரே ஒரு எண்ணத்தினால் மாத்திரம் நிரப்பப்படும். நிஷ்டையும் பின்தொடரும். ஒரு எண்ணம் அல்லது ஒரு செயலைப் பன்முறை செய்தலானது அவ்வெண்ணம் அல்லது செயலின் பூரணத்தன்மைக்கு வழிகோலுவதைப் போல், ஒரே எண்ணத்தின் முறையொன்றைப் பல தடவை செய்தலானது ஒன்றித்தல், தியானம் இவற்றின் பூரணத்வத்திற்கு வழிகாட்டுகின்றன.

கீழ்க்காணும் பிரயோகங்களை கீதையில் பின்வரும் அநேகவிடங்களில் காணலம்.

அனன்ய சேதா; மச்சித்த; நித்யயுக்த; மன்மன; ஏகாக்ரம் மன; ஸர்வ பாவ். இப்பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் உங்கள் முழு மனதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியதிருக்கும் என்பதையே குறிக்கின்றன. அப்பொழுது தான் நீங்கள் ஆத்மானுபூதியை அடைவீர்கள். மனதின் ஒரு கதிர் கூட வெளியே செல்லுமேயாகில் தெய்வீக உணர்வைப் பெறுதல் அசாத்தியம். உங்கள் மனதில் வி÷க்ஷபம் நிலவிநிற்குமேயாகில் தியானத்தில் நிலைத்து நிற்கவும் மனச்சாந்தியைப் பெறவும் உங்களால் இயலாது. மனசஞ்சலமே வி÷க்ஷபமாகும். ரஜஸே வி÷க்ஷபமாகும். மனதில் வி÷க்ஷபமும் ரஜஸும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் வி÷க்ஷபத்தை ஒழிக்க விரும்பினால் இச்சையடக்கம், இறைவனிடத்தில் ஆத்ம சரணாகதி மூலமாக இவ்வநித்ய ஆசைகளை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்.

மனத்தூய்மை: நீங்கள் ஆத்மானுபூதியை அடைய விரும்பினால் பரிசுத்தமான மனதைப் பெற்றிருக்க வேண்டும். ஆசைகள் அவாக்கள், கவலைகள், மயக்கம், கர்வம், காம உணர்ச்சி, பற்றுதல், விருப்பு வெறுப்புகள் முதலியவற்றிலிருந்து மனம் விடுபட்டாலொழிய பரமசாந்தி, மாசற்ற இன்பம், நித்திய வாழ்வு முதலியவற்றின் சாம்ராஜ்யத்தினுள் புக அதனால் இயலாது. மனம் ஒரு பூங்காவனத்துடன் ஒப்பிடப்படுகிறது. உழுதல், உரமிடுதல், களை அறுத்தல், முட்களை நீக்குதல், மரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்ய முடிவதைப்போல் பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீரைப் பாய்ச்சி உங்கள் மனமாகிய பூங்காவில் பக்தியென்னும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யலாம். முட்களும் களைகளும் மழை காலத்தில் தோன்றி கோடைக்காலத்தில் மறைகின்றன. ஆனால் அவைகளின் விதைகள் பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. ஒரே ஒருதரம் மழை பெய்தவுடன் விதைகள் மறுபடியும் முளைத்துக் குருத்து விடுகின்றன. இதுபோலவே, மனதின் விருத்திகளும் மேல்தளத்தில் தோன்றுகின்றன. பிறகு மறைந்து, சமஸ்காரங்களின் ரூபத்தில் நுண்ணிய விதை நிலையை மேற்கொள்கின்றன. அக அல்லது புறத் தூண்டுகோலினால் இந்த சமஸ்காரங்கள் மறுபடியும் விருத்திகளாகின்றன. களைகள், முட்களின்றி பூங்காவனம் சுத்தமாக இருக்கையில் இனிய பழங்களை நீங்கள் பெறலாம். இதுபோலவே, மனம் சுத்தமாக இருக்கையில் பேராசை, கோபம் முதலியவற்றிலிருந்து விலகி மனம் தனித்திருக்குங்கால், நல்ல ஆழ்ந்த தியானமாகிய பழத்தை நீங்கள் பெறலாம். ஆகவே முதலில் மனதை அதன் அசுத்தங்களிலிருந்து சுத்தப்படுத்துங்கள். பிறகு தானாகவே தியான ஊற்று பெருக்கெடுத்தோடும்.

நீங்கள் ஒரு தோட்டத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், களைகள் முட்கள் பிற செடிகள் முதலியவற்றை நீக்குவதோடல்லாமல் மழைக்காலத்தில் மறுபடியும் மறுபடியும் துளிர்விடும் ஏனைய விதைகளையும் நீங்கள் நீக்கவேண்டியிருக்கும். இதேபோல் நீங்கள் சமாதி அவஸ்தையையும், பரிபூரண சுதந்திரத்தையும் பெற விரும்பினால் மனதின் விருத்திகளாகிய பெரிய அலைகளை மட்டும் அகற்றுவதோடல்லாமல், மறுபடியும் மறுபடியும் விருத்திகளை முளைக்கச் செய்யும் பிறப்பிற்குரிய விதைகளான சகாரங்களையும் இல்லாதாக்க வேண்டியதிருக்கும். ஈரமுள்ள பச்சை மரமொன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது தீப்பற்றிக் கொள்ளாது. ஆனால் காய்ந்த மரம் ஒன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது உடனே தீப்பற்றி எரியும். அதுபோல், தங்கள் மனதைப் பரிசுத்தப் படுத்தாதவர்களால் தியானமாகிய தீயை எழுப்ப முடியாது. அவர்கள் தியானத்திற்கு உட்காருகையில் தூங்கிக் கொண்டோ, உடையை சரிபடுத்திக் கொண்டோ, அல்லது மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டோ இருப்பர். ஆனால் தங்கள் மனதிலிருக்கும் அசுத்தங்களை ஜபம், சேவை, ஈகை, பிராணாயாமம் முதலியவற்றால் நீக்கியவர்கள் ஆசனத்தில் அமர்ந்த மாத்திரத்திலேயே, தியானத்திலாழ்ந்து விடுவர். நன்கு உலர்ந்தமனம் தியானத்தீயுடன் உடனே தீப்பற்றிக் கொள்ளும். தினந்தோறும் ஒரு தட்டை நீங்கள் கழுவாவிடில் அது ஒளி மழுங்கிவிடும். மனதிற்கும் இதேநிலை தான். ஒழுங்காகத் தியானப் பயிற்சியுடன் மனம் சுத்தமாக வைத்திருக்கப்படாவிட்டால் அது அசுத்தமடைகிறது. தியானம் வியக்கத்தகும் வகையில் மன அழுக்கை நீக்குகிறது. ஆகையினால் ஒழுங்காக விடியற்காலையில் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

எந்த ஒரு ஜீவப்பிராணிக்கும் பேராசை, சுயநலம், வெடுவெடுப்பு, தொந்தரவு முதலியவற்றால் துன்பம் கொடுக்காதீர்கள். சமர்செய்யும் உணர்ச்சியையும் காரசாரமான விவாதங்களையும் விட்டொழியுங்கள். விவாதம் செய்யாதீர்கள். எவருடனும் சண்டை செய்தாலோ அல்லது எவருடனாவது ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாலோ நீங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு தியானம் செய்ய முடியாது. உங்கள் மன சமத்வநிலை தடுமாற்றமடைகிறது. உபயோகமில்லாத கால்வாய்கள் மூலம் அதிகமான சக்தி வீணாக்கப்படுகிறது. இரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கை இழந்துவிடும். எனவே, எப்பொழுதும் பிரசாந்தமானதோர் மனதைக் கொண்டு விளங்க நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் செய்ய வேண்டும். அமைதியானதோர் மனத்திலிருந்தே தியானம் தோன்றமுடியம். தூய மனம் தான் உங்களது விலையுயர்ந்த ஆன்மீகப் பொக்கிஷமாகும். உண்மையாகவே தியானத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எச்சமயத்திலும் உண்மையையே நீங்கள் மொழிய வேண்டும். பிறர் மனதைப் புண்படுத்தத் தக்க வகையில் எந்த ஒரு சுடு சொல்லையும், அநாகரீக வார்த்தையையும் நீங்கள் மொழிதல் கூடாது. சிறுகவே நீங்கள் பேச வேண்டும். இதுவே உங்களுக்குச் சக்தியளித்து, மனசாந்தியையும் ஆத்மீக பலத்தையும் அளிக்கக் கூடிய வாக்தபஸாகும்.

உங்கள் ஒழுக்கத்தை ஆராயுங்கள். அதில் புலப்படும் தவறொன்றைப் பொறுக்கி எடுங்கள். அதன் எதிரிடையை கண்டுபிடியுங்கள். நீங்கள் கோப குணம் பொருந்தியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். கோபத்திற்கு எதிர் குணம் பொறுமை. பொறுமையின் தனித்த குணத்தில் தியானித்து, இவ்வரிய குணத்தை விருத்தி செய்ய முனையுங்கள். ஒவ்வொரு நாள் விடியற்காலையிலும் நான்கு மணிக்குப் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து மனம் சுற்றித்திரியுங்கால் அதைப் பிடித்திழுக்கும் வகையில் தீவிரமாக சிந்தித்து, பொறுமை அதன் மதிப்பு, உத்வேகத்தின் போது அதை எங்ஙனம் பயிலுதல் முதலியவற்றை ஒவ்வொறு நாளும் ஒவ்வொரு குணத்தின்மீது சிந்தனை செய்ய முனையுங்கள். மனம் ஓடத்தொடங்கும் போதெல்லாம் அதைப் பிடித்திழுத்து நிறுத்துங்கள். உங்களை முற்றிலும் பொறுமையுடையவர்களாகவும், சாந்தஸ்வரூபிகளாகவும் நினைத்து, எனது உண்மை ஆத்மாவான இந்தப் பொறுமையை இன்றிலிருந்து நான் கொண்டு நிற்பேன் என்ற சபதத்துடன் முடியுங்கள். சிறிது நாட்களுக்குக் காணக்கூடிய அளவுக்குள்ள மாற்றங்கள் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் பழைய முரட்டுக் குணத்திலேயே நின்று வாழலாம். ஒவ்வொரு நாளும் காலையில் நன்கு அப்பியசித்து வாருங்கள். நான் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் அடிக்கடி உருவாகி நிற்கும். தொடர்ந்து அப்பியசித்து வாருங்கள். பொறுமையின்மையுடன் பொறுமையுணர்ச்சியும் சேர்ந்து தோன்றி வருவதுடன் பொறுமையின்øயின் வெளிப்படுகை ஒடுங்கி வரும். இன்னும் தொடர்ந்து அப்பியசியுங்கள். உத்வேக உணர்ச்சிகளெல்லாம் அடங்கி ஒடுங்கி நிற்பதுடன், நெருக்கடி நேரங்களில் பொறுமையானது உங்களது இயற்குணமாகவே அமைந்து விடும். இந்த மாதிரி, இரக்கம், தன்னடக்கம், தூய்மை, பணிவு, பெருந்தன்மை, தாராள மனப்பான்மை முதலிய உயர் பண்புகளை வளர்க்க முற்படுங்கள். மனதின் செயல்களே உண்மையில் கர்மங்கள் எனப்படும். செயலற்ற மனதின் மூலமே உண்மை விடுதலை உருவாகிறது. மனதின் ஆட்டத்திலிருந்து விடுபட்டவர்களிடம் சீரிய நிஷ்டை வந்தடைகிறது. மனம் மாசகன்ற தன்மையை அடைந்ததும், சாந்தியை அடைவதுடன் பிறப்பிறப்பைத் தரும் சம்சார மயக்கங்கள் விரைவிலேயே ஒழிக்கப்படுகின்றன. தூய்மையைப் பெற்ற பின் ஏற்படும் மனஒருமைப்பாடு உங்களுக்கு உண்மை இன்பத்தையும், அறிவையும் அளிக்க வல்லது. இந்த விஷயத்திற்காகவே நீங்கள் பிறந்துள்ளீர்கள். பற்றுதலினாலும், மோகத்தினாலும் நீங்கள் புறப்பொருள்களால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். கடவுளை இதயத்தில் தியானித்து நில்லுங்கள். ஆழ்ந்து தியானியுங்கள். உள்ளந்தரங்கத்தில் இரண்டறக் கலந்து ஒன்றாகுங்கள்

தியானத்திற்குதவும் உணவு வகைகள்!



சாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை நன்கு பயில முடியாது. பாலுணவு சரீரத்தை மிக மிக லேசாக்குகிறது. ஒரே ஆசனத்தில் மணிக்கணக்காக உங்களால் உட்கார முடியும். பலகீனமாகத் தோன்றினால் ஓரிரண்டு நாள் சிறிது சாதம் அல்லது பால் அல்லது பார்லி அல்லது ஏதாவது சிற்றுண்டியை நீங்கள் உட்கொள்ளலாம். சேவை செய்கின்றவர்கள், மேடைப் பிரசங்கங்கள் நிகழ்த்துவோர் மற்றும் தீவிரமான ஆத்மீகப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் கட்டியான நல்லுணவை நன்கு உட்கொள்வதனால் தடையில்லை.

சிந்தனைக் கலை: நீங்கள் தியானத்துக்கு உட்காரும் பொழுது, நண்பர்கள் அலுவலக வேலை, மாலையில் நண்பர்கள்-உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இவைகளின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் மனதின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். திரும்பத் திரும்பப் பிடித்திழுத்து மனதை லட்சியத்தில் நிலை நிற்கச் செய்ய வேண்டும். உலகியல் எண்ணங்களை நீங்கள் புறக்கணித்து நிற்க வேண்டும். அவற்றைச் சற்றேனும் சட்டை செய்யாதீர்கள். இவ்வெண்ணங்களை வரவேற்காதீர்கள். இவ்வெண்ணங்களுடன் உங்களை ஒன்றுபடுத்தாதீர்கள். இவ்வெண்ணங்கள் எனக்குத் தேவையில்லை. இவற்றுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது, என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வெண்ணங்கள் படிப்படியாக மறைந்து விடும். மனம் ஒரு குறும்புக்காரக் குரங்கு போன்றது. அதை அன்றாடம் ஒழுங்குபடுத்த வேண்டும். படிப்படியாக அது உங்களுக்குக் கீழ்ப்பணிந்து நடக்கும். நடைமுறை அனுபவத்தினால் தான் நீங்கள் தீய எண்ணங்களை அகற்றி நிறுத்தும் சக்தியைப் பெறுவீர்கள். நடைமுறைப் பயிற்சியினாலேயே நல் எண்ணங்களை நிலைத்து நிற்கச் செய்ய உங்களால் இயலும்.

சதா உங்கள் மனதை ஜாக்கிரதையுடன் கண்காணித்து வாருங்கள். விழிப்புடனிருங்கள். பொறாமை, கோபம், பகைமை, காமவிகாரம் முதலிய தீய உணர்ச்சிகளை மனதில் தோன்ற அனுமதிக்காதீர்கள். இந்தக் கறுத்த அலைகள் தியானம், ஞானம், சாந்தி இவற்றின் பெரும் பகைவர்கள். தூய நற்சிந்தனையைக் கொள்வதன் மூலம் இவற்றை உடனேயே அடக்கி நிறுத்துங்கள். பகவந் நாம உச்சாரணம், நற்செய்கை, தீய எண்ணங்களின் விளைவுகளான துன்பங்களின் மூல காரணத்தை ஆராய்தல், நான் யார் என்ற விசாரம், அல்லது தீய எண்ணங்களை அடக்குவதற்கு உறுதி பூண் இச்சா சக்தி முதலியவற்றைக் கொள்வதனால் நிலை நிறுத்தப்படும் நல்லெண்ணங்கள் மூலமாகத் தீயெண்ணஙககளைத் தகர்த்தெறிய வேண்டும். தூய்மை நிலையை அடைந்ததும் தீய எண்ணங்களை மனதில் முளைக்காது. வீட்டின் வாசலிலேயே பகைவனைத் தடுத்து நிறுத்துவது எளிதென்பதைப் போல் தீயஎண்ணம் தோன்றியவுடனேயே அடக்கி விடுவது எளிது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை வேர்விட அனுமதிக்காதீர்கள்.

ஆரம்பத்தில், தியானத்திற்கு உட்கார்ந்த உடனேயே எல்லாவிதத் தீய எண்ணங்களும் உங்கள் மனதில் தோன்றி நிற்கும். தூய எண்ணங்களைக் கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் இது ஏன் ஏற்படுகிறது? இதனால் சாதகர்கள் ஆத்மீக சாதனையைக் கைவிட்டு விடுகின்றனர். ஒரு குரங்கை நீங்கள் விரட்டியடிக்க முனைந்தால், அது உங்களைத் தாக்க முயலுகிறது. இதேபோல் பழைய தீய சம்ஸ்காரங்களும், தீய எண்ணங்களும், நல்லெண்ணங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் முதலியவைகளை நீங்கள் கொள்ள முயற்சிக்கும் போது, உங்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க பகைவன் உங்களை எதிர்த்து நிற்பதைப் போன்றதே இது. எதிர்ப்பு நியதி இயற்கையோடமைந்தது. மனிதனே! கொடுஞ் சித்தமுடையவனாக இராதே! தொன்று தொட்டே உங்கள் மனத்தொழிற்சாலையில் வாசம் செய்ய எங்களை நீங்கள் அனுமதித்து உள்ளீர்கள். அங்கு தங்க எங்களுக்கு சகலவித உரிமையும் உள்ளது. உங்கள் தீச்செய்கைகளில் எல்லாம் இதுவரையிலும் நாங்கள் உங்களுக்கு எவ்வளவு உதவி புரிந்துள்ளோம்! ஏன் எங்களைத் துரத்திவிடப் பார்க்கிறீர்கள்? நாங்கள் எங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டோம் என்று பழைய தீய எண்ணங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன. அதைரியமடையாதீர்கள். தீய எண்ணங்கள் தானாகவே தொலைந்து போகும். பிறகு அவை முளைத்தெழவே செய்யாது! நேரிடை எப்பொழுதும் எதிரிடையை வெல்லுகிறது. இதுவே இயற்கையின் நியதி. எதிரான தீயஎண்ணங்களால் நேரிய நல்லெண்ணங்களுக்கு எதிரில் நிற்க இயலாது. தைரியம் பயத்தை வெற்றி கொள்கிறது. சினத்தையும் முற்கோபத்தையும் பொறுமை தோற்கடிக்கிறது.

வெறுப்பை விருப்பு தோல்வியடையச் செய்கிறது. பேராசைத் தன்மையை பரிசுத்தத் தன்மை வெற்றி கொள்கிறது. தியானத்தின் பொழுது மேல்மனத்தில் ஒரு தீயஎண்ணம் தோன்றுகையில், நீங்கள் வருத்தம் சிறிது அடைகிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அந்நாட்களில் நீங்கள் உணர்ந்தே எல்லாவித தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுத்தீர்கள். நீங்கள் அவற்றை வரவேற்று போஷித்தீர்கள். உங்களது ஆத்மீகப் பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள். பிடிவாதமுடையவர்களாகவும் இருங்கள். நீங்கள் வெற்றியையே அடைவீர்கள் என்பது திண்ணம். இடைவிடாது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஜபத்தையும், தியானத்தையும் மந்த நிலையிலிருக்கும் சாதகனொருவன் கூடச்செய்து வருவானேயாகில் தன்னால் வியத்தக்க மாறுதலை அவன் காண்பான். இப்பொழுது இவனால் பயிற்சியை விடமுடியாது. ஒரே ஒரு நாள் தியானப்பயிற்சியை அவன் நிறுத்துவானாகிலும், அந்நாளில் தான் எதையோ இழந்து விட்டதைப் போன்று அவன் உணர்வான். அவனது மனம் முற்றிலும் வருத்தத்துடனிருக்கும்.

ஒரு பெரிய கண்ணாடியையும் அதன்முன் ஒரு ரொட்டித் துண்டையும் ஒரு நாய் முன் வைத்தால், கண்ணாடியில் ஏற்படும் அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து நாய் குரைக்கிறது. அங்கு மற்றோர் நாய் இருப்பதாக அது தவறுதலாக நினைக்கிறது. அதேபோல ஜனங்களெல்லாரிடத்திலும் தனது மனக்கண்ணாடியின் மூலம் தன் பிரதி பிம்பத்தையே மனிதன் காண்கிறான். ஆனால் நாயைப்போன்று முட்டாள்தனமாக அவர்களையெல்லாம் தன்னிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதி பகைமை, பொறாமை காரணமாகச் சண்டையிடுகிறான். நேர்மையுடன் கூடிய வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால் ஆழ்ந்த தியானத்தில் புக உங்களால் இயலும். நல்வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால், விவேகம் முதலிய பிற படிகளையும் உங்கள் மனதில் உருவாக்க நீங்கள் முயற்சி செய்யலாம். மனஒருமைப்பாட்டிற்கு நீங்கள் உங்கள் மனதை விருத்தி செய்யலாம். கடைசியில் தியானத்திலேயே நீங்கள் ஈடுபடலாம். ஒழுக்கமிகும் வாழ்க்கையில் அதிகமதிகம் ஈடுபடுவதாலும், அதிகமாகத் தியானிப்பதாலும் நிர்விகல்ப சமாதியில் திளைத்து நிற்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வரிய நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுவித்து நித்தியானந்தம் அமர பதவிக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும். நன்னடத்தை நியதிகளைக் கைக்கொள்ளாத ஒருவனுடைய மனதில் செய்யப்படும் தியானப் பயிற்சி மோசமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்படும் வீட்டை ஒக்கும். மணலின் மீது நீங்கள் வீட்டைக் கட்டலாம். ஆனால் அது கட்டாயம் கீழே விழுந்து விடும். ஒழுக்க அடிப்படையில்லையெனில் வருடக்கணக்காக நீங்கள் தியானத்திலீடு பட்டாலும் ஒரு பயனும் ஏற்பட முடியாது. நீங்கள் வீழ்ச்சியுறுவது திண்ணம். எனவே, ஒழுக்கப்பயிற்சியின் மூலமாக ஏற்படும் மனத்தூய்மை, தியானம், சமாதியில் வெற்றி பெற எண்ணும் ஒருவனுக்கு இன்றியமையாதது. தியானப் பயிற்சியிலீடுபடுவதற்கு முன்னால் நீங்கள் மிகத் தேவையான நேரிய நல்வாழ்க்கையில் நிற்க முயல வேண்டும். உங்களிடம் நல்லறிவு தோன்றி நிற்கவேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தியானத்தில் வெற்றி பெறுவீர்கள். உண்மையான பயிற்சியைவிட மனதை தியானத்திற்குத் தயார் செய்வதில் தான் காலதாமதம் அதிகமாகிறது. எதிரி எண்ணங்களை விரட்டியடியுங்கள். சதா நேரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். நேரிடை எதிரியை வெல்லுகிறது. நேரிடையில் நிற்கும் பொழுது நீங்கள் நன்கு தியானிக்க முடியும்.

மனம் இடையறாது புலப்பொருள்களில் வசிக்கும் பொழுது இவ்வண்டம் உண்மையானது என்ற எண்ணம் அதிகரிப்பது சத்தியமே. மனம் பரம்பொருளை எப்பொழுதும் நாடி நின்றால் உலகம் ஒரு கனவாகத் தோன்றுகிறது. மனதின் பயனற்ற பல சங்கல்பங்களிலிருந்தும் நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இடைவிடாத ஆத்ம விசாரத்தில் ஈடுபடுங்கள். இடைவிடாத என்ற பதத்தைக் கவனியுங்கள். இது மிகவும் முக்கியமானது. அப்பொழுது தான் அத்மீக ஞானம் உருவாகும். சிதாகாசத்தில் ஞானசூரியன் உதயமாவான். தேத்தாங்கொட்டையினால் கலங்கிய நீர் தெளிவடைவது போல் வாசனைகளும் பொய்யான சங்கல்பங்களும் நிறைந்த மனதைப் பிரம்ம சிந்தனையினால் தெளியவைக்க வேண்டும். அவ்வமயமே உண்மையான ஆத்மதரிசனம் ஏற்பட வழி பிறக்கும். இரண்டு முயல்களைத் துரத்திச் செல்லும் மூடமனிதனால் ஒன்றையும் பிடிக்க முடியாததுபோல், எதிரியான இரண்டு எண்ணங்களின் பின் ஓடும் தியானியால் வெற்றியடைய முடியாது. பத்து நிமிடங்களுக்குத் தெய்வீக எண்ணங்களும் பிற்பாடு உலகியல் எண்ணங்களும் ஒருவனிடம் தோன்றி நிற்குமானால், தெய்வீக உணர்வைப் பெறுவதில் அவன் வெற்றி அடையமாட்டான். நீங்கள் ஒரே முயலையே பலமாகப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதை நீங்கள் பிடிப்பது உறுதி. சதா சர்வகாலமும் நீங்கள் தெய்வீக எண்ணங்களையே கொண்டு விளங்க வேண்டும். அப்பொழுதுதான் கடவுளை விரைவிலேயே காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உப்பு அல்லது சர்க்கரையினால் தண்ணீரை நீங்கள் பூரிக்கச் செய்வது போல் கடவுள், பிரம்மனை பற்றிய எண்ணங்களினாலும், தெய்வீகப் புகழ், சீரிய உணர்ச்சியூட்டும் ஆன்மீக எண்ணங்களினாலும் மனதைப் பூரிக்கச் செய்ய வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக நீங்கள் தெய்வீக உணர்வில் நிலைநிறுத்தப்படுவீர்கள்.

நிதித்தியாசனத்தில் நீங்கள் ஸ்வஜாதீய விருத்தி பாவத்தை விருத்தி செய்ய வேண்டியதிருக்கும். இரத்தப் பெருக்கைப் போன்று தெய்வீக சாந்நித்தியத்தின் எண்ணங்களை ஏற்படுத்துங்கள். விஜாதீய விருத்தி பாவத்தை திரஸ்காரம் செய்யுங்கள். பொருளின் எண்ணங்களை விட்டொழியுங்கள். விவேகம், விசாரம் என்ற சாட்டையினால் அவைகளை விரட்டியடியுங்கள். ஆரம்பத்தில் தொந்தரவு சிறிது இருக்கும். உண்மையிலேயே அது ஒரு முயற்சியாகும். உங்கள் சக்தி பெருகப் பெருக, பரிசுத்தத்தன்மையிலும், பிரம்ம சிந்தனையிலும் நீங்கள் விருத்தியடைகையில் சாதனை எளிதாகிறது. ஒற்றுமையில் ஓங்கிய வாழ்க்கையில் நீங்கள் இன்புறுகிறீர்கள்; ஆத்மாவிலிருந்து சக்தியடைகிறீர்கள். மனம் ஒன்றித்தபின் உள்சக்தி வளருகிறது. தியானத்தின் பொழுது உங்களால் எவ்வளவு நேரம் உலக எண்ணங்களிலிருந்து அகன்று நிற்க முடிகிறது என்பதைக் கவனியுங்கள். மிக கவனமாக மனதைக் கண்காணியுங்கள். 20 நிமிடங்களுக்கு அது தனித்திருக்குமேயானால் 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அந்நேரத்தை நீளச்செய்து 2 அல்லது 3 மணி நேரங்களுக்குக் காலவளவை உயர்த்த முயற்சியுங்கள். மறுபடியும் மறுபடியும் மனத்தைத் தெய்வீக எண்ணங்களால் நிரப்புங்கள். இடைவிடாத பயிற்சியினால் மனதைக் கட்டுப்படுத்த முடியும். அதை நீங்கள் தெய்வீக எண்ணங்களால் நிரப்புதல் அவசியம். உங்கள் முயற்சிகளைத் தளர்த்துவீர்களேயானால், வீண் எண்ணங்கள் உடனேயே புகுந்துவிடும். இடைவிடாத பயிற்சியினால் மனதை எளிதிலே கட்டுப்படுத்த முடியும். எளிய உணவுடன் கூடிய இடைவிடாத தியானத்திலேயே சமாதி ஏற்பட வழி பிறக்கும். உலைகளத்தில் ஒரு இரும்புத்துண்டை வையுங்கள். அது தீயைபோன்று சிவப்பாகிறது. தீயிலிருந்து அதை நீக்கி விடுங்கள். அது செந்நிறத்தை இழக்கிறது. அதை செந்நிறமாகவே எப்பொழுதும் வைத்திருக்க விரும்பினால், தீயிலேயே நீங்கள் அதை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இதுபோன்றே, பிரம்ம ஞானத்தீயினால் மனத்தைப் பாதுகாக்க விரும்பினால், இடைவிடாத, ஆழ்ந்த தியானத்தினால் பிரம்மஞானத் தீயுடன் அதை எப்பொழுதும் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும். இடைவிடாத பிரம்ம ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பிறகு நீங்கள் சகஜ அவஸ்தையை அடைவது உறுதி

எது தியானம்?



ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம்.

தியானத்திற்குரிய தேவைகள்:

காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். சிறிதும் தொந்தரவின்றி உங்கள் மனம் பரிசுத்தமாக இருக்கும் பகல் அல்லது இரவின் அப்பகுதியையே தேர்ந்தெடுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் தியானத்தில் அமரலாம். இந்நேரத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். ஞாயிறு நாட்கள் விடுமுறை நாட்களாதலால் மனம் சுதந்திரமாக இருக்கும். அன்று நீங்கள் நன்கு தியானத்தில் ஈடுபடமுடியும். ஞாயிறு நாட்களில் தீவிர தியானத்தில் ஈடுபடுங்கள். பால் பழங்களை மட்டும் உணவாகக் கொள்வதாலோ, உபவாசத்தை மேற்கொள்வதாலோ நல்ல தியானம் ஏற்படும். சதா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி தியானத்தினால் பெரும் பயனை அடையுங்கள்.

இடம்: உத்தரகாசி, ரிஷீகேசம், பத்திரிநாராயணன் முதலிய ஆத்மீகச் சூழ்நிலைகள் ஓங்கி நிற்கும் ஏகாந்தமானதும் குளுமையானதுமானதோர் இடம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இன்றியமையாதது. எங்ஙனம் நீரில் உப்பு கரைந்து ஒன்றாகிறதோ, அதே போல் தன் அதிர்ஷ்டானமான பிரம்மத்தில், தியானாவஸ்தையிலுள்ள மௌன நிலையில், சாத்துவிக மனம் கரைந்து ஒன்றாகிறது. தனிமையும் தீவிர தியானமும் ஆத்மானுபூதிக்கான இரு முக்கிய தேவைகள், கங்கை அல்லது நர்மதையின் தீரம், இமாலயத் தோற்றம், அழகிய பூந்தோட்டம், புனிதக் கோவில்கள்-இவையே ஒன்றித்தல், தியானத்தில் மனதை உயர்த்தும் இடங்கள். இவ்வரிய இடத்தையே உங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசனம்: சித்தாசனம் அல்லது பத்மாசனம் சரீரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பந்தனங்களும் முத்திரைகளும் உடலை உரப்படுத்துகின்றன. பிராணாயாமம் காயத்தை லேசாக்குகிறது. நாடிசுத்தி மனஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வரிய தகுதிகளைப் பெற்றதும், பிரம்மனிடம் மனதைப் பதியவையுங்கள். அப்பொழுதுதான் தியானம் இலகுவாகவும் சந்தோஷமாகவும் தொடர்ந்து நிற்கும்.