Pages

sai yoga centre

sai yoga centre
Showing posts with label ஆழ்மனதின் அற்புத சக்திகள். Show all posts
Showing posts with label ஆழ்மனதின் அற்புத சக்திகள். Show all posts

Sunday, December 11, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 59


நினைவில் நிறுத்த சில உண்மைகள்!

து வரையில் ஆழ்மன சக்திகள் அடையத் தேவையான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம். ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.

ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார்.

பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.
இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு 'ட்யூன்' ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி 'ட்யூன்' ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்றுபோகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.
முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச்சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். "காலணா கொடுத்தால் படகுக்காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?". அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.
இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"
ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்..."
மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும்.
ஏனென்றால், அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.
இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.
மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.
இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.
ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.
ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்புஎன்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.
ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும் ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.
பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.
உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப்போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.

உங்களுடைய இந்தப் பயணம் மேலும் இனிதே தொடர வாழ்த்து கூறி விடைபெறுகிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 58


பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு

நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும்.

ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.
இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால், "அறிவியலில் எல்லாக்கேள்விகளுக்கும் பதில் இல்லை," என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
ராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.
நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் 'ட்யூன்' ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 57


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி

ருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.
இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்துஇல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.

அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வுபூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 56


 உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்!

தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் 'ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்,' என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.
உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.
மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.
தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில்ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். "இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்".
அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார்.
"அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்."
சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.
ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும்.
கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.
இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.
பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.
பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.
இனி பயிற்சிக்குச் செல்வோம்.
எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.
ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மிக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.
நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.
துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.
இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.
இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 55


அறிந்ததை சோதித்துப் பார்க்க 'டெலிபதி'


ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம்.

 கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.
ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.
அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.
இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.
ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.
முதலில் 'டெலிபதி' எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரணசந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.
ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.
இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார்.ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. "ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது"என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது செல்போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.
முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.
பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.
இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.
அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு 'ட்யூன் ஆக' ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்துக்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒருவிஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.
அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 54


மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி



ழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத்தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது.

அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
'ஏ' பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'பி' பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'சி' பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக 'டி' பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது 'டி' பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது.

1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் "உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்," என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ "பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை," என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. 'வீடியோ கேம்'களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.

அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 53


ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!

ழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவேஅவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில்இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.
இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.
துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையேநன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.
என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். "எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்". அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான்நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.
பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. "இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியேஉங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.