Pages

sai yoga centre

sai yoga centre

Wednesday, November 30, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 15

ஆவிகளின் மீடியம் 

ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல; இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) உடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.

ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில், அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே, அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது.

அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று...

"ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள்.


ஆனால், அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார். சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான
சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால், சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு."

கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ஃப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.

அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ஃப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.

இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஓர் ஆராய்ச்சியாளர் அவர் தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார். இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ஃப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.

அந்தக் குரல்களில் ஒரு சில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒரு சில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும்,
தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர்.

உதாரணத்துக்கு, ஃப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒப்புக் கொண்டார்.

லெஸ்லி ஃப்ளிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். "நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ஃப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய பல
கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்."

No comments:

Post a Comment