
எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல் தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பி வருகிறது. ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை.
அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலைமோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக்கொண்டேயும் (Interaction) இருக்கும். ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக் கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.
நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு திரும்பும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக் கொண்டுயிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். பயன் கொள்ள வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment