Pages

sai yoga centre

sai yoga centre

Sunday, November 6, 2011

ஆன்மா

இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது. ஆன்மா என்றவடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.

ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.


தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம். தரிசனங்கள், சமயப் பிரிவுகள் எல்லாம் வெவ்வேறு கொள்கைகளை உடையவை. தங்களுடைய கொள்கைகளே சரியானவை என்று நிலைநாட்ட அவை அற்புதமான காரணங்கள் காட்டும். என்னுடைய சொந்த அனுபவத்தைப் பற்றித்தான் நான் பேச முடியும்: ஆன்மா தெய்வத்தன்மையுடையது, பரம்பொருளின் ஒரு நித்தியமான பாகம், அதனுடைய தர்மத்தைத் தவிர வேறு எந்த தர்மத்தாலும் அதற்கு வரம்புகட்டவோ தலையிடவோ முடியாது.


இந்த ஆன்மாக்கள் இறைவனால் அவனுடைய வேலையைச் செய்வதற்காக அவனிடமிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விசேஷ நோக்கத்துடன், ஒரு விசேஷ வேலைக்காக, ஒரு விசேஷ ஊழுடன் பூமியின் பிறக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய, விலக்க முடியாத தர்மம் உண்டு, அது பொதுவிதியாக இருக்க முடியாது. ஆகவே, நித்தியமான சிருஷ்டியில், நம்மால் கற்பனை செய்யக்கூடியவை எல்லாமும் கற்பனை செய்ய முடியாதவையும் கூட இருக்கவே செய்யும்.


ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.
ஒருவன் மனிதனுடைய ஆன்மாவுடன் பேசும்போது உடலில், இனவகையில் அல்லது பண்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், எப்போதும் ஒரே ஆன்மாவுடனேதான் பேசுகிறான்.ஆன்மாவால் இறைவனை நினைக்க முடியாது, ஆனால் உறுதியுடன் அவனை அறியும். ஒரு மலர் சூரியனைக் கண்டு மலர்வதைப்போல உன் ஆன்மா இறை ஒளியைக் கண்டு மலரும்.
 நான் எனது ஆன்மாவை முன்னேறச் செய்வது எப்படி?


உன்னுடைய ஆன்மா மீது செயல்பட வேண்டுமானால் முதலில் நீ அதை உணர வேண்டும். நீ உன்னுடைய ஆன்மாவை உணரும்போது, நீ உன்னுடைய ஆன்மாவை முன்னேறச் செய்யவில்லை உன்னுடைய ஆன்மாதான் நீ முன்னேற உதவுகிறது என்பதை நீ உணரக்கூடும்.ஆன்மா என்பது என்ன, அது எந்த வடிவில் நம்முள் இருக்கிறது?முதலில் ஆன்மா இறைவனிடமிருந்து வந்த ஒரு ஒளிப்பொறியின் வடிவில் இருக்கும்.  பரிணாமத்தின் மூலம் அது தனித்தன்மை பெற்ற ஜீவனாகிறது, அதன்பிறகு அதனால் தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

ஆன்மா தன்னை எதுவாக அறிகிறதோ, எதுவாக உள்ளதோ, அதுவாக மனம், உயிர், உடல் ஆகவேண்டும், அதுவாக வாழவேண்டும்.ஒருவனுடைய ஆன்மா விழித்துவிட்டபின் அதைத் தள்ளிவிடுவது எளிதல்ல, ஆகவே அதன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்துவிடுவதே நல்லது.
உன்னுடைய ஆன்மாவுக்குக் கீழ்ப்படி, அது ஒன்றுதான் உனது வாழ்க்கையை ஆள்வதற்கு உரிமை உடையது.

 சைத்திய மையம்: ஒளி பொருந்தியது, அமைதியுடையது, அது மனித ஜீவனை ஆள்வதற்காக உண்டாக்கப்பட்டது.சைத்திய புருஷன் ஜீவன் முழுவதையும் ஆளும்போது அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது. சைத்திய ஆற்றல் இயற்கையின் செயல்களை முன்னேறச் செய்வதற்காக அவற்றை ஒழுங்குபடுத்துகிறது.சைத்திய புருஷன் செல்வாக்குப் பெற்றிருக்கும்போது எல்லாச் செயல்களும் சமநிலை பெறுகின்றன. சைத்தியச் செல்வாக்கு தூல ஜீவனை இறைவனை நோக்கித் திரும்பும்படி கட்டாயப்படுத்துகிறது. இந்த வீடு சைத்திய புருஷனின் சின்னமாக நித்தியமான தெய்வீக சாநித்தியத்தின் கோயிலாக இருக்கட்டும்.சைத்திய மையத்தின் உணர்வில் வாழ், அப்பொழுது உன்னுடைய இச்சா சக்தி இறைவனின் சங்கற்பத்தை மட்டும் வெளிப்படுத்தும், அப்பொழுது உருமாற்றமடைந்த ஜீவனால் இறைவனின் அன்பைப் பெறவும் அதை வெளிப்படுத்தவும் இயலும்.

மனிதனின் மையம் சைத்திய புருஷனே, அது அந்தர்யாமியாகிய இறைவன் உறையும் கோயில். ஒருமைப்படுத்துதல் (Unification) என்றால் ஜீவனின் செயல்களெல்லாம் (மனம், பிராணன், உடலின் செயல்கள்) இறைவனின் சாநித்தியத்தின் இச்சையின் சரியான வெளிப்பாடாக இருக்குமாறு சைத்திய மையத்தைச் சுற்றி ஒழுங்கு செய்தலும் இசைவுபடுத்துதலும் (Harmonisation) என்று பொருள்.


நான் யார்
இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘என்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’.

நான் என்பது நான் இல்லை, எண்ணம் ஒன்றுமே நானாக இருக்கிறது.

அது நீ
தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் சம்பாஷணையில் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை
இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு
ஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.

ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்
அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம். பிருகதாரண்யக உபநிஷத் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிருகதாரண்யக உபநிஷத் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.
ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச. பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது.

No comments:

Post a Comment