Pages

sai yoga centre

sai yoga centre

Saturday, November 12, 2011

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 7

எண்ணப் புகைப்படங்கள்!எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்துக்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது.



தன் கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்ட போது, ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க, அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஆனால், தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதை 1931-ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார். ஆனால், அப்போதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.

அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது. தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார். அவரது நண்பர் விளையாட்டாக, "உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம்" என்று சொல்ல, அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார்.

ஜூல் இய்சன்பட்டெட் சிரியோஸ்
ஆனால், அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.

இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே, அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இய்சன்பட்டுக்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டுக்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்துக்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.


பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ். பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ், "இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா?" என்று சொல்ல, பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள். டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டடத்துக்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.

1967ல் இய்சன்பட் "டெட் சிரியோஸின் உலகம்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். ஒரு சில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார். அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும், இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.

பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை. ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment