“ஒரு மனிதனின் வாழ்க்கையின் மொத்த வடிவத்தை, புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. ஒரு மனிதன் விட்டுச் சென்ற விடயங்களை வைத்து, அவனது வாழ்க்கையைக் கணித்துக் கொள்ள முடியுமென சிலபேர் சொல்கின்றார்கள். இன்னும் சிலரோ, ஒருவன் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் கணிக்க முடியுமென நம்புகின்றனர். சிலர் அன்பு என்று கூடச் சொல்கின்றனர். ஏனையவர்களோ, வாழ்க்கைக்கு எந்தவித அர்த்தமுமேயில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.”
“என்னைப் பொறுத்தவரையில், மற்றவர்கள் எவ்வாறு உங்கள் சார்பாக தங்களை கணிக்கும் முறையில் தான் நீங்கள் உங்களை கணித்துக் கொள்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.”
மனிதன் தனது பிறப்பின் ஆரம்ப அவதியிலிருந்தே, ஆசை பற்றிய அறிவோடு தான் தன்னை உருவாக்கிக் கொள்கின்றான். ஆசைகள் யாவற்றையும் துறந்த மனிதரை யாராலும் காட்டமுடிகின்றதென்றால், அங்கே பொய் சொல்லப்படுகிறது என்றே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும். இங்கு ஆசைகளை நீங்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது.
அத்தியாவசிய தேவை, தேவை, அவசியம் என்றெல்லாம் மொழி, ஆசைகளை வெவ்வேறு வகையாக பார்க்க வழி செய்து தந்திருக்கிறது. கனவுகளின் தொடர்ச்சிதான் இந்த ஆசைகளின் எழுச்சி, கனவுகள் எப்படி முக்கியமோ அது போலவே ஆசைகளும் முக்கியமானவையே என்று நீங்கள் புரிந்து கொள்ளக்கூடாது.
ஆனாலும், மனிதனாகவிருக்கும் எவனிடமும் கட்டாயம் ஆசையிருக்கும். சின்னச் சின்ன ஆசைகள் எனத் தொடங்கி, அவன் யாரிடமும் சொல்லிவிடாத ஆடம்பர ஆசைகள் என ஆசைகளின் பட்டியல் நீண்டு கொண்டேதான் இருக்கும். ஆக்கம், அழிவு என்ற இரு சொற்களின் அர்த்தங்களை ஆசைதான் அதிகமாக உணர்த்தித் தரும்.
இங்கு ஆசை பற்றிய புரிதல் அரிதாகவே இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். கடலில் நீந்த வேண்டுமென்றால், மொத்தக் கடலையும் ஒரு தடாகத்தில் கொண்டு தரவேண்டும். அங்குதான் நீந்துதல் சாத்தியமாகும் என்கின்ற கூற்றை யாராலும் பிழையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதனை நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகக் கண்டு கொள்ள முடியும்.
இந்தக் கூற்றையே நியாயப்படுத்த ஆர்வமாய் விவாதிக்கும் பலரையும் என்னால் இப்போதெல்லாம் காண முடிகிறது. ஆசை பற்றிய தன் நியாயங்களை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்ற இன்னொரு ஆசைதான் அவர்களை இவ்வாறு உருவாக்கிவிடுகிறது. இங்கும் ஆசைதான் அவர்களுக்கு ஆர்வம் கொடுக்கிறது.
கடல் என்பது அதன் இருப்பில் இருக்கும் போதுதான் அதன் இயல்பைப் பெறுகிறது. அதனால் தான் கடல் என்று பெயர் பெறுகின்றது என்பதை யாரும் சொல்லித் தரவேண்டாம். இந்த விடயம் புரியப்பட வேண்டும்.
கரையிலிருப்பவனுக்கு நீந்துவதற்கு ஆசை. நீந்துபவனுக்கு கரை சேர ஆசை. இப்படியான விவாதத்தையும் இந்த விடயம் விரித்துச் செல்லுவது தவிர்க்க முடியாததே!
இங்கு சொல்லப்பட்ட ஆசை என்பது பயமாக, பொறாமையாக பல வேளைகளில் இருப்பதுண்டு. இங்குதான் பலரும் சுயம் இழந்து போகின்றனர்.
நாம் வாழ்கின்ற நிலையில் ஏற்படும் பொறாமைகள் கூட இன்றளவில் ஆசை என்ற பெயர் கொண்டு குறிப்பிடப்படுவது மிகப் பெரிய கொடுமையானதே! காரணமில்லாத காத்திருப்புகளுக்குக் கூட, ஆசை, வெறி, தேவை என்றெல்லாம் வியாக்கியானம் செய்து கொள்ள பலருக்கும் முடிந்திருக்கிறது.
இது அப்படியாக இருக்கக்கூடாது.
நோயினால் வாடும் இருவர், தம் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தைச் சந்திக்கப் போகிறார்கள். பூமியில் அவர்களின் இருப்புக்கு தேதி குறிக்கப்பட்டதாகி விட்டது. தங்களின் ஆசைகள் பற்றிய அவர்களின் ஆர்வத்தின் நீட்சிதான் The Bucket List என்கின்ற அழகிய திரைக்காவியம்.
வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களை திரையில் காணக்கூடியதாகவிருப்பது கவிதை. அங்கு செயற்கையான எதுவுமே இல்லை. திரையில் விரியும் வாழ்க்கையைக் கண்டுதான் வியக்கமுடிகிறது.
நாம் எல்லோரும் ஆசைகளோடுதான் வாழ்கிறோம். சில நேரங்களில் எமது ஆசைகளில் ஒன்று நடந்துவிடும் போது, “அதனை நான் ஆசைப்பட்டேன், எனக்கு கிடைத்துவிட்டது” என்று சொல்லி அந்த ஆசையை அம்பலப்படுத்துகிறோம். ஆனால், பல ஆசைகளை பலரும் வெளியில் சொல்வதில்லை.
சிறுவயதில் ராட்டினத்தின் குதிரையில் சென்ற சவாரியை வயது வந்த நிலையிலும், அனுபவிக்க வேண்டுமென நாம் எண்ணிய போதிலும், அந்த எண்ணத்தை செயற்படுத்துவதால், உலகம் எவ்வாறு நம்மைப் பார்க்கும் என்ற கேள்விக்கான பதில் எல்லோரிடமும் எதிர்மறையான கற்பனைகளாகவே இருந்து விடுவதால், சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் போய் விடுகின்றன.
வாழ்க்கையில் வயது வந்துவிட்ட போதும், எமக்குள் இருக்கின்ற சிறுபிள்ளைத்தனங்களுக்கு நாம் சில வேளைகள் தானும் வாழ்வு கொடுக்க வேண்டும். அது மகிழ்ச்சியே வாழ்க்கை என்ற மந்திரம் அறிந்த பருவம். காசு கொடுத்தாலும் வாங்க முடியாது. உண்மையிலேயே..
இப்படி ஆசை என்கின்ற கனதியான சொல்வடிவம், வாழ்க்கைக்கு தரும் அர்த்தங்கள் ஆச்சரியங்கள் நிறைந்தவையே. ஆசைகளின் பட்டியல் என்பது ஒவ்வொருத்தர் சார்பிலும் வேறுபடும். நாம் ஆசை கொண்டுள்ள விடயங்களை அடைந்துவிட வேண்டுமென்கின்ற ஆசை, எப்போதும் ஆசையின் வலிமையைச் சொல்லித்தரும்.
புராதன எகிப்தில் வாழ்ந்த மக்களிடம் மரணம் பற்றிய நம்பிக்கையொன்று இருந்தது. அவர்களில் யாரும் மரணித்துவிட்டால், அவர்கள் சுவர்க்கத்தின் நுழைவாயிலில் வைத்து இரண்டு கேள்விகள் கேட்கப்படுவார்கள். அந்த இரண்டு கேள்விக்குமான பதில்களே அவர்கள் சுவர்க்கத்திற்கு நுழையக்கூடியவர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.
“நீ உனது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டு கொண்டாயா?” – “உனது வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்திருக்கிறதா?” என்பவையே அந்த இரண்டு கேள்விகளுமாகும். இந்த இரண்டு கேள்விகளுக்குமான ஆம் என்ற பதில், எமது ஆசைகள் பற்றிய புரிதலை விரிவாக்க ஆதாரமாக இருக்கும் என நம்பலாம்.
தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தருகின்ற விடயங்களை ஆசைகளாக்கிக் கொள்வதை நாம் வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஆனால், அவன் இறந்துவிடுவான் அவனது செருப்பை நான் மாட்டிக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் ஆசைகள் வரையறுக்கபட்டதை நான் கண்டு கொள்கிறேன். இது ஆசை என்ற பெயரால் அறியப்படக்கூடியதுமல்ல.
“நான் இறைவனிடம், புதிய சைக்கிளொன்று வேண்டுமென சிறுவயதில் பிரார்த்தனை செய்தேன். இறைவன் அந்த வகையில் உதவுவதில்லை என உணர்ந்தேன். புதிய சைக்கிளொன்றை களவாடி, பின்னர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.” என்ற அமெரிக்காவின் பிரபல்யமான நகைச்சுவையாளர், Emo Philips இன் நகைச்சுவை கலந்த சிந்தனை ஆசை பற்றிய இன்றைய மனிதனின் ஆர்வத்தை சொல்லிச் செல்கிறது.
ஆசைகளை அடைந்து கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு தனிநபரும் தமது முயற்சிகளை முன்னெடுப்பதை தொடங்க முன்னமே, அதற்கான தன்பக்க நியாயங்களையும் காலங்காலமாக வரும் அனுமானங்களையும் யாருமே ஆராயக்கூடாதென்ற வகையில் கட்டியெழுப்பப்பட்ட சதியாலோசணைகளையும் (conspiracy) தமக்கு வலிமை சேர்க்கும் வகையாக சேகரித்துக் கொள்கின்றான். ஊக்கியாகக் காட்டிக் கொள்கிறான்.
இங்கு தனிநபரின் விருப்புகள் தான், அவன் சார்பான நம்பிக்கையையும் மற்றவர்களின் பால் அவனது ஈடுபாட்டையும் தீர்மானிக்கிறது. “Dogma எனப்படுகின்ற மறுக்கக்கூடாத கொள்கை என்ற சொல்லை எனக்கு ரொம்பப் பிடித்தாலும், அது சொல்கின்ற விடயங்களை எமக்கு பிடிப்பதில்லை” .
ஆசையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே என்பது தான் ஆசையின் உச்சக்கட்டம். அப்படிப்பட்ட ஆசையை பற்றி நம் முன்னோர்கள் கூறுவது.
- நெருப்பை புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல் ஆசை அறிவை மறைக்கும் என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத்கீதை.
- அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான் என்கிறது மகாபாரதம்.
- துன்பத்திற்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடியோடு ஒழிப்பதுதான்.
- நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால் அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்பபோக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக் கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.
உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல்
தெளிவிலாதேன்…
‘எல்லை மீறினால் எதுவும் துன்பமே’ என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா, இல்லை… நமக்கும்தானே?
No comments:
Post a Comment