உள்ளுணர்வு (instinct) என்பது ஒரு உயிரினம் வெளியிலிருந்து கற்றுக்கொள்ளாமலேயே அது கொண்டிருக்கும் நடத்தையாகும். உள்ளுணர்வு என்பது ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ மிக இன்றியமையாததாகும். குட்டிக்குரங்கு மரக்கிளையில் தாவிக்கொண்டிருக்கும் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது உள்ளுணர்வு. அதே குரங்கு ஒரு கல்லைப் பயன்படுத்திக் கொட்டையை உடைப்பது என்பது அது வெளியிலிருந்து கற்றுக்கொண்ட ஒன்று ஆகும்.

“நீங்கள் உங்கள் உள்ளுணர்வினால் செயல்படும்போது உங்களை அது சரியான வழியில் இட்டுச் செல்கிறது. அது உங்களுக்கு எது சிறந்ததோ அதையே செய்கிறது”. - ஹேல் ட்வாஸ்கின்
ஒரு தெருவில் நீங்கள் நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒரு இரு முனைப் பிரிவு வருகிறது. நீங்கள் எந்தவிதக் காரணமுமில்லாமல் மனதில் தோன்றிய ஒரு காரணமற்ற உள்ளுணர்வின்படி இடது அல்லது வலது பிரிவில் திரும்பி நடக்கிறீர்கள். இது ஒரு மிகச்சாதாரணமான விஷயம்தான். அந்தப் பிரிவில் நீங்கள் செல்லும்போது எதிர்பார்க்காத விதமாக நெடுநாட்கள் பார்க்காதிருந்த ஒரு பழைய நண்பரைச் சந்திக்க நேரிடலாம். இது நீங்கள் சிந்தித்துச் செயல்பட்டதில்லை. உங்களின் இனம் தெரியாத உள்ளுணர்வு. அந்தப் பிரிவில் செல்லத்தூண்டியது.
இது போலத்தான் வாழ்க்கையின் சில முக்கிய சந்தர்ப்பங்களில் கூட நமது உள்ளுணர்வு ஒரு முடிவை எடுக்கத் தூண்டும், உந்தும். ஆனால் அந்தப் பிரச்சினைகளின் சாதக பாதகங்களை ஆராயாமல் முடிவெடுக்க நாம் அஞ்சுகிறோம். ஏனெனில் பிரச்சினைகளுக்கு பின் விளைவுகளை ஆராயாமல் முடிவெடுத்தால் என்ன நேரிடுமோ என்ற அச்சம். இது நியாயமானது. உள்ளுணர்வின் உந்துதலுக்கு செவி சாய்க்காததின் மூலம் உங்கள் நல்ல முடிவெடுக்கும் வாய்ப்புக்களை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள் என மிகவும் வெற்றிகரமான மனிதர்கள் கூறுகிறார்கள். உள்ளுணர்வு என்பது நம் பிறப்பிலேயே நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வரம், திறமை. உள்ளுணர்வு என்பது நம் மனதின் உயரிய சக்திகளோடு, நம்மை இணைக்கிறது. இந்த உள்ளூணர்வு நமது இதயத்தில் உதித்து பின்பு மூளைக்குச் சென்று நம்மை அதன்படி முடிவுகள் எடுக்க ஆணையிடுகிறது. இந்த உள்ளுணர்வு என்பது அறிவுசார்ந்தது அல்ல. எந்த தர்க்க வாதத்திற்கும் உட்பட்டது அல்ல. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நாம் அறிவுப்பூர்வாக மட்டும் முடிவெடுக்க முடியாது. அந்த சந்தர்ப்பங்களில் நமது உந்துசக்தி, அனுபவம், புதிதாகப் படைக்கும் திறன் இவைகள் கலந்த உள்ளுணர்வு சக்தியினால் நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் இந்த உள்ளுணர்வு என்பது ஏதோ சிலருக்கு மட்டுமே வாய்த்த பரிசு என்ற கருத்து நிலவியது. ஆனால் இப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உள்ளுணர்வு சக்தி இருந்து முடிவுகள் எடுக்க வழிகாட்டுகிறது எனத் தீவிரமாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். காரண காரியங்களை லாஜிக்கலாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியாத, நெருக்கடியான முடிவெடுப்பதை தள்ளிப்போட முடியாத சந்தர்ப்பங்களில் இந்த உள்ளுணர்வு கைகொடுக்கிறது. நமக்கு அம்மாதிரியாக முடிவெடுக்க வேண்டிய அவசியங்கள் ஏற்படும்போது நம் உள்ளுணர்வின் சக்தியை எழுப்ப சில வழிகள்:
ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முடிவெடுக்கவேண்டிய காரியங்களைப் பற்றிய எந்த முன்கூட்டிய முடிவுகள் எடுக்காமல், மனத்தைத் தளர வைத்துக் கொள்வது. அப்போது முடிவுகள் இயற்கையாகவே உள்ளுணர்வால் தோன்றும். சில சமயங்களில் மற்றவர்களுடைய அபிப்ராயங்களையும், அனுபவங்களையும் கேட்கையில், உங்களின் உள்ளுணர்வில் தானாகவே ஒரு முடிவு தோன்றும்.
எப்போதும் தீர ஆலோசித்தே முடிவுகள் எடுக்க நாம் பழகி விட்டதால் நம் உள்ளுணர்வின் சக்தியின்மீது நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். நாம் நம் உள்ளுணர்வை விழிக்கச்செய்தால் மட்டும் போதாது. அதன் மேல் நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனால் நாம் உள்ளுணர்வின் படி முன்பு எடுத்த முடிவுகளைப்பற்றிக் குறித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். அந்தக் குறிப்புகள் முன்பு உள்ளுணர்வின்படி நாம் முடிவெடுத்த சந்தர்ப்பங்கள் என்ன, அந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள உதவும்.
எந்த இடத்தில் முடிவெடுத்தபோது உங்களின் உள்ளுணர்வின் சக்தி அதிகமாக சக்தி வாய்ந்ததாக இருந்ததோ (உங்கள் அலுவலகமா. அல்லது வீடா, அல்லது கடற்கரையா என்பது போன்று) அந்த இடத்தில் மீண்டும் சென்று உள்ளுணர்வின் சக்தியைப் பயன்படுத்தலாம்.
உங்களின் உள்ளுணர்வின் சக்தியை வள்ர்த்துக் கொள்வதற்கு அதை ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் செய்யாமல், அதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொள்ளலாம். உங்கள் உள்ளுணர்வின் சக்தியை சோதிப்பதற்கு நீங்கள் ஒரு முன்பின் தெரியாத இடத்திற்கு சென்று யாரையும் வழி கேட்காமலேயே, எந்த வரைபடத்தையும் பார்க்காமலேயே உங்கள் உள்ளுணர்வையே மட்டும் நம்பி உங்கள் இடத்திற்கு திரும்பிவர முயற்சி செய்யலாம். இது உங்களுக்கு உங்கள் உள்ளுணர்வின் மீது உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்.
உள்ளுணர்வின்படி சில முடிவுகள் எடுப்பதினால் அனாவசியமான மனோ சக்தி விரயமாகாமல், மன இறுக்கமில்லாமல் முடிவெடுக்க முடிவதும், நமது சுய வழிகாட்டும் திறமைகள் வளர்வதும், பிரச்சினைகளை ஒத்திப் போடாமல் விரைவாக முடிவெடுக்க முடிவதும் முக்கிய நன்மைகள். ஆனாலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நமது உள்ளுணர்வின்படியே மட்டும் முடிவெடுப்பது சரியானதா என்பது அவரவர்களின் அனுபவத்தையும் அவர்களுக்குத் தங்கள் உள்ளுணர்வின் மீது உள்ள நம்பிக்கையையும் பொறுத்தது.
சந்தேகம்...
எந்த ஒரு சிந்தனையாளரைக் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்.
ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, அதைச் செய்யலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படுகிறது. அது சந்தேகமா, உள்ளுணர்வின் குரலா என்று எப்படித் தீர்மானிப்பது?ஒரு குரல், சந்தேகத்தின் குரலா என்று நீங்கள் சந்தேகம் கொள்கிறீர்களா? அப்படியானால் சந்தேகமேயில்லை! அது சந்தேகம் தான்!
ஏன் தெரியுமா? உள்ளுணர்வின் குரல், உங்களுக்குள் ஒரு கேள்வியோ, சிக்கலோ, தேடலோ தீவிரமாகும்போது ‘பளிச்’ சென்று எழுகிறது.
“என்னசெய்வது! ஏதும் புரியவில்லையே!” என்று குழப்பம் வருகிறதென்றால் அந்தக் குழப்பத்தின் உச்சியில் திடீரென்று பாய்கிறவெளிச்சம்தான் உள்ளுணர்வு.சந்தேகத்தின் கதை வேறு. அதுவா? இதுவா? அப்படியா? இப்படியா? என்று எழுகிறகேள்விகளின் தடுமாற்றம்தான் சந்தேகம். பல்வேறு காரணங்களை நீங்களாகப் பட்டியலிட்டு, தனக்குள்ளேயே தக்கம் செய்யும்போது அது சந்தேகத்தின் விளையாட்டு.
சரியாகச் சொல்வதென்றால், ஒரு சிக்கலை நீங்கள் மேலோட்டமாகவும், முழு ஈடுபாடு இல்லாமலும் அணுகுவீர்களென்றால் அது வெறும் சந்தேகமாகத்தான் இருக்கும்.ஒரு கேள்வி உங்களுக்குள்ளேயே வெகுதீவிரமாக மையம் கொள்ளுமானால் அதற்கு பதில் சொல்கிறவேலையை உள்ளுணர்வு எடுத்துக் கொள்கிறது.
எல்லாத் திசையிலும் இருட்டு மூடிவிட்டது என்று கருதுகிறபோது திடீரென்று வருகிறவெளிச்சம், உள்ளுணர்வின் வெளிச்சம்.
இன்னொரு சூழ்நிலையிலும் உள்ளுணர்வு நன்கு செயல்படுவதை நீங்கள் பார்க்க முடியும்.உங்கள் தனிப்பட்ட தேவை, குடும்பம், வேலை, கல்வி என்கிறஉங்கள் சின்னச் சின்ன அடையாளங்கள் ஆகியவற்றைஎல்லாம் கடந்து, இந்தப் பிரபஞ்சம் என்கிறபெரிய சக்தியின் ஒரு துளியாக உங்களை உணர்கிறபோது, உங்கள் உள்ளுணர்வு நன்கு வேலை செய்கிறது.ஏன் தெரியுமா? உள்ளுணர்வு என்பதே, உங்களுக்குள் இருக்கிறபிரபஞ்சம் பேராற்றலின் அம்சம்தான்.
உங்கள் சராசரி எல்லைகளைக் கடந்து, உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொள்கிறபோது உள்ளுணர்வு தூண்டப்பட்ட நிலையில் மிகத் துல்லியமான முடிவுகளை எடுப்பீர்கள்.உங்கள் தகவல் அறிவு, நீங்களே சேகரித்த அனுபவம், மற்றவர்களிடம் நீங்கள் பார்த்த விஷயங்கள், ஆகியவற்றின் அடிப்படையில் எழுவது அடிப்படைச் சந்தேகம்.
இந்த நிலையில் பிரச்சினை உங்களுக்கும் மேலே இருக்கிறது.
பிரச்சினையை விட மேம்பட்ட மனநிலையில் நீங்கள் இருக்கும் போது உள்ளே ஒலிக்கும் குரல்தான் உள்ளுணர்வின் குரல். எனவே, சிக்கல்கள் ஏற்படுகிறபோது மட்டும் உள்ளுணர்வின் உதவியைத் தேடாமல், எப்போதும் உள்ளுணர்வைத் தூண்டப்பட்ட நிலையிலேயே வைத்திருங்கள். பரந்த சிந்தனை, எல்லைகளைக் கடந்த எண்ண ஓட்டம், தியானம் போன்றவை உள்ளுணர்வைத் தூண்ட உறுதுணை புரியும்.
No comments:
Post a Comment