உன்னதவாழ்வுக்கு ஸ்ரீமத் பகவத் கீதை
பகவத்கீதையில் ‘யோகம்’ என்ற சொல் பல்வேறு இடங்களில் பல மாறுபட்ட பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்னுமிடத்தில் ‘தலைப்பு’ என்று பொருள். 2ஆவது அத்யாயத்தில் 53ஆவது சுலோகத்தில் ‘மோட்சம்’ அல்லது பரமாத்மாவை அடைதல் என்ற பொருளில் வருகிறது.
ஒருவனின் புத்தி எப்பொழுது சமாதியில் (பரமாத்மாவிடம்) நிலைபெறுகிறதோ அப்பொழுது அவன் மோட்ச நிலையை அடைகிறான் என்று ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார் (2.53)
இவ்வாறு ஆத்மஞானத்தில் நிலைபெற்ற ‘ஸ்திதப்ரக்ஞ’னான சித்த புருஷனின் லட்சணங்கள் யாவை என்று அர்ஜுனன் அறிய விரும்புகிறான்.
இனிவரும் விளக்கங்களில் ஸ்திதப்ரக்ஞன், ப்ரம்மஞானி, நிறைஞானி, ஸ்திரபுத்தி யுடையவன், உறுதியான அறிவுடையவன், சித்தபுருஷன் ஆகிய சொற்களெல்லாம் - சமாதியில் நிலைபெற்ற பரிபூரணத் தன்மையை அடைந்த மஹாபுருஷனையே குறிக்கும்.
அர்ஜுனன் நிறையோகியின் லட்சணங்களை அறிய விரும்புவது ஏன்? ஓவியனொருவன் படம் வரையும் போது தன்முன் ஒரு படத்தையோ பொருளையோ முன்மாதிரியாக (னீஷீபீமீறீ) வைத்துக் கொள்கிறான். வாழ்க்கையில் பலர் ‘நான் இவரைப்போல் ஆக வேண்டும்’ என்று தனக்கு முன்மாதிரியாக (க்ஷீஷீறீமீ னீஷீபீமீறீ) வைத்திருப்பார்கள். அதுபோல அர்ஜுனனும் தானும் உறுதியான அறிவுடையவனாக வேண்டுமென்றால் ஆதர்சமாகக் (முன்மாதிரியாக) கொள்ள அத்தகைய ஒருவரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? அல்லது தானே அந்நிலையை அடைந்து விட்டதாக எவ்வாறு அறிவது ? என்ற நோக்கில் கண்ணனிடம் கேட்டான்.
“ஹே! கேசவ! நிறைஞானியான ஒருவன் செயலற்ற அந்தர்முகமான சமாதி நிலையிலும் உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஹிர்முகமான நிலையிலும் எப்படி நடப்பான்? ஞான நிஷ்டையின் வெளிப்பாடுகள் யாவை?”
இவ்வினாக்களுக்கு 2ஆவது அத்யாயத்தின் கடைசி 18 சுலோகங்களும் (55-72) விடையாக அமைந்துள்ளன. இடையிடையே சந்தர்ப்பத்திற்கேற்ப தொடர்புள்ள பல கருத்துகளையும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா எடுத்துக்கூறுகிறார்.

கண்ணனின் பதில் இவ்வாறு அமைகிறது.:
எப்பொழுது ‘ஆத்மாவே ஆனந்தம்’ என்ற பேருண்மையை நன்கு உணர்ந்து கொண்டு ஒருவன் புலன் இன்ப நுகர்ச்சியை அறவே அகற்றுகிறானோ, அப்பொழுது அவனுடைய அறிவு நிலைபெற்ற அறிவாகிறது.(2.55)
சந்தோஷத்திற்காக ஒருவன் எதையுமே சார்ந்திராமல் இருக்கும்போது அவன் ஞானத்தில் நிலைத்துவிட்டதாக அறிவாயாக. எல்லா உயிர்களிலும் தன்னைப் பார்க்கிறவன் பிற உயிர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்று நினைப்பதில்லை. ஸ்திதப்ரக்ஞனானவன் பிற பொருள்களிலோ பிற மனிதர்களிடத்திலோ வெளிச் சூழ்நிலையிலோ ஆனந்தத்தை தேட வேண்டியதில்லை. தானே ஆனந்த வடிவம் என்று உணர்ந்து தன்னில் தான் இன்புற்றிருக்கிறான். இதன் வெளிப்பாடு என்னவென்றால். மனத்தில் தோன்றும் காமங்கள் எல்லாவற்றையும் அறவே நீக்கிவிடுகிறான். ஆத்மசுகத்தை நன்கு உணர்ந்திருப்பதால் விஷயசுகத்தை மட்டுமல்ல, விஷயசுகத்தில் உள்ள இச்சையைக்கூட முழுமையாக விலக்குகிறான். ப்ரம்மானந்தம் என்னும் வெண்ணெயைச் சுவைத்தவன் ஒருபோதும் விஷயானந்தம் என்னும் மண்ணைச் சுவைக்கமாட்டான்.
ஒப்புவமை: ஆத்மானம் சேத் விஜானீயாத் அயமஸ்மீதி பூருஷ:
கிமிச்சன் கஸ்ய காமாய சரீரம் ஸன்ஜ்வரேத் (ப்ருஹதாரண்யக உபநிஷத்)
இந்தப் பரம்பொருளாகவே நான் இருக்கிறேன் என்று எவனொருவன் நன்றாக உணர்ந்து தெரிந்து, தெளிந்து கொள்வானோ அவன் எதனை விரும்புவான்? எவர் பொருட்டு தன்னை துக்கத்தில் ஆழ்த்திக் கொள்வான்? (அதாவது, துக்கத்தில் மாட்டிக் கொள்ள மாட்டான் என்று பொருள்)
மனீஷா பஞ்சகத்தில் ஒரு சுலோகம் கூறுகிறது - ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித் - ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன் ப்ரஹ்மமே ஆகிறான். இவ்வாறு உணர்ந்து கொண்டவன் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறான்.
ஸ்திரபுத்தி உள்ள ப்ரம்மஞானியின் அடையாளங்கள் குறித்து அர்ஜுனனின் கேள்விக்கு விடையாக ஸ்ரீ க்ருஷ்ணர் மேலும் தொடர்கிறார்:
துன்பம் வருங்கால் துடியாத மனத்தை உடையவன்: இன்பத்தில் நாட்டம் இல்லாதவன்: பற்று, அச்சம், சினமற்றவன்: ஆழ்ந்த சிந்தனையாளன் ஆனால் மௌனமாக இருப்பவன் எவனோ அவனே உறுதியான மெய் அறிவை உடையவன் (2.56)
எவன் அஸங்கப்ரேமை உள்ளவனோ அதாவது எல்லாரையும் தன்னைப்போலவே பார்ப்பதனால் எல்லாரிடத்திலும் பரந்த அன்பு கொண்டிருக்கிறானோ ஆனால் அத்வைத ஞானத்தினால் எவரிடத்தும் பற்றில்லாமல் இருக்கிறானோ, வாழ்வில் வரும் சந்தோஷம் - துக்கம் ஆகியவை குறித்து மகிழ்ச்சியோ வெறுப்போ அடைவதில்லையோ - அவனுடைய ஞானம் நன்றாக நிலைத்து நிற்கிறது. (2.57)

சங்கரர் கூறுகிறார் :
யானி முக்தஸ்ய லட்சணானி தானி முமுட்சோ: ஸாதனானி
துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற முக்தனின் இயல்பை, துன்பங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் முமுட்சுவானவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஸித்தனுடைய இலக்கணம் ஸாதகனுக்கு ஸாதனங்களாகும்.. ஆகையால் முக்தி அடைய விழைபவன் முக்தனின் லட்சணங்களை நன்கு அறிந்து கொண்டு அத்தகைய குணங்களைப் பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகையால் மூன்று (55.56.57) சுலோகங்களில் ஸ்திதப்ரக்ஞனின் லட்சணங்களைக் கூறிய பகவான் மேற்கொண்டு பதினோரு சுலோகங்களால் (58-68) ஸ்திதப்ரக்ஞ உபாயம் அதாவது ஞானத்தை மனத்தில் தக்க வைத்துக் கொள்ளும் உபாயத்தை இவ்வாறு விளக்கத் தொடங்குகிறார்.
ஆபத்து வரும்போது ஆமையானது தன் அவயவங்களைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்கிறது. அதுபோல அறிவாகிய ஓட்டுக்குள் பொறிகளை அடக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். எப்பொழுது ஓர் ஆத்மஞானி பொறிகளின் விஷயங்களிலிருந்து பொறிகளை எல்லாவகையிலும் முழுமையாக விலக்கிக் கொள்கிறானோ அப்பொழுது அவனுடைய ஞானம் உறுதியாகிறது.(2.58)
த(பீ)ம: இந்திரிய நிக்ரஹம் என்றெல்லாம் கூறப்படும் புலனடக்கத்தின் அவசியத்தை ஸ்ரீக்ருஷ்ணர் இங்கு வலியுறுத்துகிறார்.
ஓப்பிடுக:
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (திருக்குறள்)
புலனடக்கம் இல்லாவிடில் ஓட்டைக் குடத்தில் விடப்பட்ட நீரைப்போல ஞானமானது இல்லாமல் போய்விடும். ஞானம் பெறுவதற்கு முன்பும் இந்திரிய நிக்ரஹம் தேவை. பெற்ற ஞானம் நிலைக்கவும் இந்திரிய நிக்ரஹம் என்று சொல்லப்படும் புலனடக்கம் அவசியமாகிறது.
‘ஐம்புலன்தன்னை வென்றான்தன் வீரமே வீரம்’
இந்திரியங்களை வெற்றி கொள்வதே உண்மையான வீரமாகும். சன்யாஸிகள் தங்கள் உடல், மனம், புத்தியை அடக்கி ஆள்வதனால்தான் அவர்களை ‘மகராஜ்’ என்று அழைப்பது வழக்கம்.
ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா தொடர்கிறார்
புலனடக்கம் பழகினால் மட்டும் போதாது. ஆத்ம த்யானமும் செய்யவேண்டும்.
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு (திருக்குறள்)
ஞானம் பெறவில்லையென்றால் புலனடக்கம் வீண் என்கிறார் வள்ளுவர்.
இந்திரியங்களை அவற்றிற்கான போகப் பொருள்களிலிருந்து விலக்கி விட்டாலும், காலியாகிவிட்ட பெருங்காய டப்பாவிலிருந்து பெருங்காய வாசைன மட்டும் நீங்காமல் இருப்பது போல் இந்திரிய போகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எளிதில் நீங்காது. அதற்குத்தான் ஆத்ம த்யானம் வலியுறுத்தப்படுகிறது.
நிறைஞானியானவன் பரமாத்மாவில் நிலைத்திருப்பதால் அவனிடமிருந்நு விஷய போகப்பற்றும் விலகி விடுகிறது. (2.59)
அடங்காத இந்திரியங்களின் தன்மையைப் பற்றி ஸ்ரீக்ருஷ்ணர் மேலும் கூறுகிறார்.
“ஹே அர்ஜுனா! விஷயப்பற்று நீங்காவிடில் புலன்களானது புத்திசாலியான விவேகியின் மனத்தைக் கூடக் கடைந்து, கலக்கி, பலவந்தமாக இழுத்துச் சென்றுவிடும். (2.60) ஆகையால் இந்திரியங்களை வசப்படுத்தி என்னையே அதாவது ஆத்மாவையே குறிக்கோளாகக் கொண்டு த்யானம் (நிதித்யாஸனம்) செய்ய வேண்டும். எவனுடைய புலன்கள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவோ அவனுடைய ஞானம் ஸ்திரமாகிறது.(2.61)
மேலும் க்ருஷ்ண பரமாத்மா இந்திரிய போகப் பொருள்களைப் பற்றிய எண்ணமானது எவ்வாறு படிப்படியாக கேடு விளைக்கிறது என்பதை விவரித்து அத்தகைய சிறிய எண்ணம் கூட மனத்தில் புகாது விழிப்புடன் இருக்கவேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறார்.
உலக விஷயத்தைப்பற்றிய சிந்தனை மட்டுமே கொண்டவனுக்கு அவ்விஷயங்களில் பற்று உண்டாகிறது. பற்றுதல் காரணமாக அவற்றைச் (உலகவிஷயங்களை) சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும், அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. காமத்திற்கு இடையூறு வருமானால் கோபம் உண்டாகிறது. கோபத்தினால் புத்தி தடுமாறி குழப்பம் ஏற்படும். குழப்பம் உண்டானால் சாஸ்திரத்தில் படித்தவை, முன் அனுபவ ரீதியாகக் கற்றவை, நலக்கேடு பற்றிய அறிவு மறந்து போகும். இவ்வாறு விவேகம் அழிந்து போகும் பொழுது புத்தி இருந்தும் பயனில்லாமல் மனிதன் வீழ்ச்சி அடைகிறான். மனிதப்பிறவியே வீணாகிறது. (2 .62 -63 )
‘ப்ரணச்யதி’ - நாசம் அடைகிறான் - என்பதற்கு மனிதப் பிறவியின் குறிக்கோளை அடையும் தகுதியை இழந்தவனாக ஆகிறான் என்று பொருள் கொள்ளவேண்டும் என்கிறார் ஆதி சங்கரர்.
ஆகையால் வாழ்க்கையின் குறிக்கோளாகிய பரமபுருஷார்த்தத்தை விரும்புபவன் புலனின்பப் பொருள்களையே நினைப்பானானால் அது படிப்படியாக அவனை வீழ்ச்சியில் தள்ளும்.. கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை இவ்வாறு வீணாக்குவது புத்திசாலி செய்யும் செயலல்லவே! விலை உயர்ந்த சந்தனக்கட்டையை விறகடுப்பில் போட்டு எரிப்பவன் முட்டாள் அல்லவோ?
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? - பாரதியார்
ஆனால் இவ்வாறு வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கான வழியையும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா கருணையோடு வழி காட்டிக் கொடுக்கிறார்.
எவனொருவன் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தி மனத்தை ஒழுங்குபடுத்தி அளவாக புலனின்பங்களை நுகர்கிறானோ அவன் உள்ளத்தில் தெளிவு பிறக்கிறது.
அஞ்சும் அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கும் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே (திருமூலர்)
முறையற்ற புலனின்ப நாட்டம் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும். முறையான அறவழி புலனின்பம் உள்ளத்தைத் தெளிவுறச்செய்து இந்திரியங்களிலிருந்து நம்மை விடுவிக்கும். (2.64)
இந்த சுலோகத்தில் ‘பிரசாதம்’ என்ற சொல்லுக்கு மனத்தெளிவு என்று பொருள்.
மனம் தெளிவடையுங்கால் ஆதிதைவிக ஆதிபௌதிக ஆத்யாத்மிக துன்பங்கள் நீங்கி சாந்தி ஏற்படும். உள்ளத்தெளிவுடன் பெறப்பட்ட மெய்யறிவானது விரைவில் நிலைபெறுகிறது. அதாவது தெளிந்த புத்தி விரைவில் பரமாத்மாவில் நன்கு ஸ்திரமாகிறது. (2.65)
புலன்களை அடக்காமல் போகங்களில் மிகுந்த பற்று கொண்டு கட்டுப்பாடின்றி விஷய சுகத்தில் ஈடுபடுபவன் அடையும் கதியைப் பற்றி ஸ்ரீக்ருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்.
புலனடக்கப் பயிற்சி இல்லாதவனுக்கு ஞானம் உண்டாகாது. அவனால் ஞானத்தை ஆழ்ந்து எண்ண முடியாது. அதாவது ஆத்ம த்யானம் இயலாது. அமைதியற்றவனுக்கு வாழ்வில் சுகம் என்பது ஏது? (2.66)

மனம் அடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? நீரில் சென்று கொண்டிருக்கும் படகு எவ்வாறு காற்றால் அலைக்கழிக்கப்பட்டு தன் பாதையை விட்டு வெகுதூரம் பின்னுக்கு அடித்துச் செல்லப்படுகிறதோ அவ்வாறே போகங்களுக்குப்பின் தொடரும் புலன்களை மனம் பின்தொடரும்பொழுது மெய்யறிவு அபகரித்துச் செல்லப்படுகிறது. ஆகவே ஞானநிஷ்டைக்கு புலனடக்கம் மிகவும் அவசியம். (2.67)
ஆகையால் பெருந்தோளுடையவனே! அர்ஜுனா! எவனுடைய இந்திரியங்கள் புலன்களுக்குரிய விஷயங்களிலிருந்து முற்றிலும் மீட்கப்பட்டு விட்டனவோ அவனுடைய அறிவே நிலைபெறுகிறது. அவனே நிறைஞானி ஆவான். (2.68)
ஆக ஸ்ரீக்ருஷ்ணர் த(பீ)ம: (புலனடக்கம்), சம: (மனக்கட்டுப்பாடு) நிதித்யாஸனம் (ஆத்மாவை த்யானம் செய்வது) என்று ஸ்திதப்ரக்ஞன் ஆவதற்கு உபாயங்கள் கூறுகிறார். இங்கு ஸ்ரீக்ருஷ்ணர் அர்ஜுனனை ‘மஹாபாஹோ’ ‘பெருந்தோளுடையவனே’ என்று உன்னாலும் அது முடியும் என்று அவனுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் அழைக்கிறார். என்னால் இந்திரிய நிக்ரஹம் பண்ணமுடியுமா? என்று சந்தேகப்பட்டுப் போயிருந்த அர்ஜுனனுக்கு கண்ணன் “இது கடினம் தான். ஆனால் முடியாததல்ல” என்று தைரியமூட்டினார்.
அஞ்ஞானத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த ஆத்ம தத்துவம் இருளைப்போல் விளங்காத பொருளாக இருக்கிறது. ஆனால் எல்லா உயிர்களுக்கும் எந்த மெய்ப்பொருள் இரவு போன்று விளங்காமல் இருக்கிறதோ அது ஞானிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் பிரகாசமாக விளங்குகிறது. ஞானமற்றவர்கள் எதை நன்கு விளங்குவதாக நினைக்கிறார்களோ அதை ஸம்யமீ இருளுக்கு நிகராக நினைக்கிறான் (2.69)
ஸம்யமீ என்ற சொல் உடலையும் மனத்தையும் பொறிகளையும் நன்கு நெறிப்படுத்தி கட்டுப்படுத்திய ஞானநிஷ்டனைக் குறிக்கும்.
ஞானியை சமுத்திரத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் ஸ்ரீக்ருஷ்ணர்.
கடல் மாறாதது. நிலைத்திருப்பது. ரத்தினங்கள் நிறைந்தது. தன்நிறைவு பெற்றது. எவ்வளவு நதிகள் வந்தடைந்தாலும் வராவிட்டாலும் கூடவோ குறையவோ செய்யாது. இதுபோல் ஞானியும் தன்னிறைவு பெற்று ஆத்ம ஞானத்தில் ஆடாமல் அசையாமல் நிலைத்திருக்கிறான்.
கடல் நதிகளைச் சார்ந்து இல்லை. ஆனால் நதிகளோ கடலைச் சார்ந்து உள்ளன. அசையாமல் நிலைத்திருக்கும் சமுத்திரத்தை நோக்கி எவ்வாறு நதிகள் சென்று கடலைக் கலங்கச் செய்யாமல் அதில் கலக்கின்றனவோ அதுபோல ஞானத்தில் நிலைத்திருக்கும் மெய்யறிவாளியை நோக்கி விஷயங்கள் செல்கின்றன. அவனாக எதையும் நாடுவதில்லை. எதனைச் சார்ந்தும் இல்லை. அவற்றால் எந்த மாறுதலையும் அடைவதில்லை. இப்பேர்ப்பட்ட தன்னிறைவு பெற்றவன்தான் சாந்தியை அடைகிறான். புலனின்பங்களை நாடிச் செல்பவனுக்கு ஒருபோதும் அமைதியில்லை
No comments:
Post a Comment