Pages

sai yoga centre

sai yoga centre

Thursday, October 25, 2012

தியானம் செய்ய உகந்த நேரம் எது?



எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.

சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.

மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.

பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.

தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.

தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.

பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.

சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.

யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.

தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.

இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!

No comments:

Post a Comment